சென்னை:
மிழ்நாட்டில் MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில், EWS பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசிடம், தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வு இதுவரை பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. பல மாணவர்களின் மருத்துவக் கனவு நசுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை எழுந்து வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளன.

இந்த நிலையில் அனைத்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசு சார்பில் பங்கேற்ற மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நீட் தேர்வை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.