சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில்  நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் விவரம் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், தலைமையில், அதிமுக அரசின் கொரோனா பேரிடர்கால மோசடிகள் & நிர்வாகத்தோல்விகள் தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம், காணொலி வாயிலாக இன்று காலை நடைபெற்றது. இதில் திமுக  கூட்டணிக் கட்சித்தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
அதையடுத்து,  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10 நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு…

தீர்மானம் : 1
கொரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்!
தொடக்கத்திலிருந்தே, முதலமைச்சரிடமும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும், கொரோனா பெருநோய்த் தொற்று பரவல் குறித்து வெளியிடுவதிலும் சொல்வதிலும் ஒரு வகையான தயக்கம் நீடித்து வருகிறது; மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் சமூகப் பரவல் என்று கருத்து அறிவித்ததற்குப் பிறகும் அதை ஏற்றுக் கொள்வதிலே தடுமாற்றம் காணப்படுகின்றது. அதனால், சரியான தரவுகளே முறையான திட்டமிடலுக்கும், சிகிச்சைக்கும் அடிப்படை என்பதை மறந்து, கொரோனாவின் ஒவ்வொரு படிநிலையிலும் எண்ணிக்கைகளைக் குறைப்பதும் மறைப்பதுமான செயல்களில் ஈடுபட்டு, குழப்பங்களையும் குளறுபடிகளையும் உருவாக்கி வருகின்றனர்.
பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை நாள்தோறும் மாவட்ட வாரியாக வெளியிடுக என்று கோரிக்கை விடுத்தும் அதற்கு அரசு செவிமடுக்கவில்லை. கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பலமுறை எழுப்பப்பட்டதற்குப் பிறகு அதை ஆராய்வதற்கு மருத்துவர்கள் குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 444 மரணங்கள் கணக்கிடப்படவில்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது. அதன் மூலம் மரணங்கள் பற்றித் திரும்பத் திரும்ப சொன்ன பொய்யையே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் இப்போது அறிந்து கொண்டுவிட்டார்கள். அ.தி.மு.க. அரசு இதுவரை, கொரோனா மரணங்கள் தொடர்பான எண்ணிக்கையில் போட்ட குளறுபடிகளுக்கு தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனா மரணங்களைப் போல, ஒவ்வொன்றையும் உட்புகுந்து ஆழமாக விசாரித்துப் பார்த்தால், இன்னும் எத்தனையோ குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வரும். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல், மரணங்களில் சொல்லிவந்த பச்சைப் பொய், அரசு தரும் அனைத்துத் தரவுகளிலுமே கலந்திருக்கும் என்ற அய்யப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. குளறுபடிக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு; கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான 10 பேரில் 7 பேர் குணமாகி வீடு திரும்புகிறார்கள் என்று கூறும் அ.தி.மு.க. அரசு- குணமாகி வீடு திரும்பிய 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குறித்த பதிவேடு ஏதுமில்லாமல் இருப்பது; அந்த 1.40 லட்சம் பேரில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு குணமானவர்கள் எத்தனை பேர்? அதற்கு தனியாக பதிவேடு இருக்கிறதா? வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமானவர்கள், மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியோர் ஆகியோரில் எத்தனை பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை மக்களுக்கு அ.தி.மு.க. அரசு தெரிவிக்காமல் மறைத்து வருகிறது.
இத்தகைய குளறுபடிகள் வேண்டுமென்றே செயற்கையாக ஆளுந்தரப்பினரால் உருவாக்கப்பட்டவை என்று தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுகிறது.
குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்? கொரோனா பேரிடரின் ஆரம்பகாலம் முதலே, தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதில், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தும், அதுகுறித்து அ.தி.மு.க. அரசு சிறிதும் வெட்கம் கொள்ளவில்லை. இந்தக் கொள்ளை நோயிலும், திட்டமிட்டு கொள்முதல் முறைகேடுகளைச் செய்த அ.தி.மு.க. அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அரசின் ஆணவ அலட்சியப் போக்கினால்- தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும்- மாவட்டங்களின் கிராமங்களிலும், கொரோனா நோய்த் தொற்று 2 லட்சத்தை நெருங்கி விட்டது; இறப்பு 3200-யைத் தாண்டி விட்டது. சென்னையில் 1 லட்சத்தைத் தொடவிருக்கிறது. மீதியுள்ள 36 மாவட்டங்களில் கரூர் தவிர – 35 மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று குறைந்தபட்சம் 500க்கும் அதிகபட்சமாக 10 ஆயிரத்திற்கும் மேலுமாக அதிகரித்து நாள்தோறும் மக்களின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் இட்டு நிரப்ப முடியாத வெறுமை ஏற்பட்டு மிகப் பெரிய கேள்விக்குறி தோன்றிவிட்டது.
மருத்துவமனை வசதிகள், மருத்துவப் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்களில் இருப்பவர்கள், நோய்த் தொற்றுக்கு உள்ளானோர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் அனைவரின் கணக்கிலுமே அ.தி.மு.க. அரசிடம் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை இல்லை; எல்லா நடவடிக்கைகளுமே ஒரு மர்ம முடிச்சுக்குள் சுருண்டு கிடக்கிறது என்பதை இந்தக் கூட்டம் பேரதிர்ச்சியுடன் பதிவு செய்து- நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு 31.7.2020 அன்று நிறைவடையும் நிலையில், இப்போதாவது, தீயாய்ப் பரவிவரும் கொரோனா நோய்த் தொற்றில் மிகுந்த தீவிரத்துடனும்- அதிக அக்கறையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு- மக்களை இந்த நோய்ப் பேரிடரிலிருந்து பாதுகாத்திட- குறிப்பாக மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 2
வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி செய்திடுக!
மார்ச் மாதம் துவங்கிய ஊரடங்கு கடந்த 125 நாட்களாக இன்றுவரை தொடர்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நிலை நீடிக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல மைச்சரே கூறிவிட்ட நிலையில், மக்கள்- தனியார் அலுவலக வேலைக்கோ, தொழில் நிறுவன வேலைக்கோ, தினக்கூலித் தொழிலுக்கோ முழுமையாகச் செல்ல முடியாமல் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் நிலைகுலைந்த அவர்களது வாழ்வாதாரம் இன்னும் நிமிரவில்லை. இதனால் தற்கொலைகள் தலைதூக்குகின்றன. வேலை இழப்பைத் தாங்க முடியாத குடும்பங்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி பசி – பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளன. சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் போக்கும்- சுயதொழில், சிறு குறு நடுத்தரத் தொழில் புரிவோர் அனைவருமே செல்லும் திசை தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், மின் கணக்கீட்டு குளறுபடிகளால் மிக அதிகமாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தைச் செலுத்த இயலாமல்- இதுவரை அனுபவிக்காத அல்லல் களுக்கு ஆளாகி அவதியுறும் சூழல் மாநிலம் முழுவதும் மிக வேகமாக உருவாகி வரு கிறது. ஆகவே மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொருளாதார ரீதியாக உடனடியாக உதவிட வேண்டியது, பொறுப்புள்ள அரசின் கடமை என்று கருதித்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்கனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் ரொக்கமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் – மத்திய அரசு 7500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் அதை அரசு ஏற்க மறுத்ததால், இன்றைக்கு விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், தெருவோரக் கடை வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு விரக்தியின் விளிம்பிலே நிற்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இழந்து விட்ட வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் மீட்டிட- மத்திய மாநில அரசுகள் ரொக்கமாக நிதியுதவி உடனடியாக அளித்திட வேண்டும் என்றும்; தவறாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ரத்து செய்து மீதித்தொகையினை, எளிய தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திட வேண்டும் என்றும்; ஏழை எளியோர் கையில் கொடுக்கப்படும் நிவாரணப் பணம் அவர்களுக்கு வாங்கும் சக்தியை உருவாக்கி, பொருளாதார சுழற்சிக்கு உதவிடும் என்பதை உணர வேண்டும் என்றும்; அ.தி.மு.க. அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3
பாதிக்கப்பட்ட- உயிர்த் தியாகம் செய்த “கொரோனா முன்கள வீரர்களுக்கான” நிதியுதவி வழங்கிடுக!
கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மக்கள் நல்வாழ்வுத்துறையின் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் முன்கள வீரர்களாக நின்று இரவு பகலாக மகத்தான பணியை ஆற்றி வருவதற்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பாராட்டுதலை யும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பில் இந்த அரசு போதிய கவனம் செலுத்தி அவர்களுக்குரிய பாதுகாப்பு உபகரணங்களை இன்னும்கூட முழுமையாக வழங்கிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்தக் கூட்டம், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்படும் முன்களப் பணியாளர்களுக்கு போதிய உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றையும் செய்யத் தவறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. முன்களப் பணியாளர்கள் நோய்த் தொற்றுக்குள்ளா னால் அவர்களுக்கு 2லட்சம் ரூபாய் நிதியுதவியும், உயிர்த் தியாகம் செய்தால் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது. முன்களப் பணியாளர்கள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது – இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை வழக்கம் போல் அ.தி.மு.க. அரசு இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடாமல் மறைத்து வருவது வேதனைக்குரியது.
கொரோனா பணியில் உயிர்த் தியாகம் செய்த முன்கள வீரர்களுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், நேர்ந்துவிட்ட இழப்பினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், உயிர்த் தியாகம் செய்தோரின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு – அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிதியை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும் என்றும், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் உரிய அடிப்படை பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 4
உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டு – அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உரிய நிதி வழங்கிடுக!
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று ஏழு மாதங்களுக்கு மேலாகியும்- ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் விதத்திலும்- நிதி ஒதுக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலும் ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க. அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மட்டுமின்றி- அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்களே உள்ளக் குமுறலுக்குள்ளாகும் விதத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழான குடிநீர்த் திட்டப் பணிகளைக்கூட ஊராட்சி மன்றங்களிடமிருந்து பறித்து- மாவட்ட அளவில் டெண்டர் விடுவதும், 14வது நிதிக்குழு உள்ளாட்சி மன்றங்களுக்கு அளித்துள்ள அதிகாரங்களை அபகரிப்பதும் மிகுந்த வேதனைக்குரியது. இதுபோலவே ‘100 நாள் வேலைத்திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டகளில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறித்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தகர்த்தெறியும் விதத்தில் எதேச்சதிகாரமாகச் செயல்படும் உள்ளாட்சித்துறை அமைச்சரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களையும், உள்ளாட்சி அமைப்புகளையும் சிறுமைப்படுத்துவதை முதலமைச்சர் அனுமதிப்பது ஜனநாயக விரோதமானதாகும்.
ஆகவே தேசத் தந்தை காந்தி அடிகள் கண்ட கிராம ராஜ்யத்தின் அடிப்படை அம்சமாக அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிக்கும் செயலைக் கைவிட்டு – கிராமங்களில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மக்கள் நலத்திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் உடனடியாக ஒதுக்கிட வேண்டும் என்றும், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் முழு அதிகாரத்தையும் ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திட வேண்டும் எனவும் அ.தி.மு.க. அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 5
அரசியல் கண்ணோட்டத்துடன் நடக்கும் காவல் துறை அவலம் !
சமூக வலைதளங்களில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்படும் பண்பாடற்ற – அநாகரிகமான- வெறுப்புணர்வைத் தூண்டி பொது அமைதியைக் கெடுக்கும் தனிமனிதத் தாக்குதல்கள்; மாநிலத்தில் சமூக, மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சதிச் செயலாகவே அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருதுகிறது. அதுபோன்ற அருவருக்கத்தக்க, தரம்தாழ்ந்த அவதூறுகள் – விமர்சனங்கள் குறித்துப் புகாரளித்தால் அ.தி.மு.க. அரசு அவற்றின் மீது சட்டப்படி நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது – பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத- சமூக விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. அரசும் கூட்டு சேர்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
சமூகநீதியின் சுடர் விளக்காக தமிழக மக்கள் மனதில் என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு “காவி பூசுவது”; சாதாரண சாமான்ய உழைக்கும் மக்களுக்காக சித்தாந்த ரீதியாகப் போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தையே அசிங்கப்படுத்துவது; அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்துவது போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க. அரசின் அனுசரணையோடு அரங்கேறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து பொது கவனத்தை திசை திருப்பும் நோக்கில், மதவெறியைத் தூண்டும் பொய்ப் பிரச்சாரங்களிலும், காரியங்களிலும் இறங்குகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக விவகாரத்திற்குக் காரணமான கயவர்கள் மீது புகார் அளித்தும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு – “குள்ளநரி” எண்ணம் கொண்ட அந்தக் கூட்டத்தைக் காப்பாற்றும் போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்படுவதற்கும்; இதுபோன்ற தரம் தாழ்ந்த – ஆரோக்கியமற்ற – தனி நபர் விமர்சனங்களை திரைமறைவிலிருந்து இயக்கி, நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தும் பா.ஜ.க.விற்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
பா.ஜ.க.வினரும், அ.தி.மு.க.வினரும் அளிக்கும் புகார்களின் மீது பாய்ந்து ஓடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, எதிர்க்கட்சிகள்- ஊடகத்தினர் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவும் ஒருதலைப்பட்சமாகவும், நடுநிலையாளர்களாக உள்ள ஊடகவியலாளர்கள் ஆணோ/பெண்ணோ அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது என்று புகார் அளித்தால் அந்தப் புகாரை அலட்சியப்படுத்துவது போன்று செயல்படுவது- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய தமிழகக் காவல்துறை தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விலகிச் செல்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது.
இந்தப் போக்கை காவல்துறை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 6
பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தோர் – பழங்குடியினர் இடஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்திடுக!
மண்டல் கமிஷன் பரிந்துரைத்து – ‘சமூகநீதிக் காவலர்’ மறைந்த வி.பி.சிங் அறிவித்து – உச்சநீதி மன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வால் உறுதி செய்யப்பட்டும் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் நடைமுறைப்படுத்திய மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான 27 சதவீத இடஒதுக்கீடு பா.ஜ.க. ஆட்சியில் முறையாக வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருவதை இக்கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திட்டமிட்டுச் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவக் கல்வியில் தமிழகத்திலிருந்து மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 50 சதவீதமும், பட்டியலினச் சமுதாயத்திற்கு 18 சதவீதமும் வழங்காமல் பா.ஜ.க. அரசு தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருவதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
பட்டியிலன மக்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வழங்கி 3 சதவீத இடஒதுக்கீட்டை மறுப்பது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
அரசியல் சட்டபூர்வமான இடஒதுக்கீட்டையும் நிராகரித்து- இப்போது “க்ரீமி லேயர் வருமான வரம்பைக் கணக்கிட “நிகர சம்பளத்தை” எடுத்துக் கொள்வோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு பிரச்சினை செய்வது சமூகநீதிக்கு எதிரானது, அரசியல் சட்டம் வரையறுத்துள்ள முகவுரை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. ஆகவே சமூகநீதியை நிலைநாட்டிட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மட்டுமின்றி- அகில இந்திய அளவில் உள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், “பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடங்களையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடங்களையும் வழங்கிட வேண்டும்” என்றும், க்ரீமிலேயர் வருமானத்தில் “நிகர சம்பளத்தை” எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் மத்திய அரசாணைகளின்படி அறிவித்துள்ள இடஒதுக்கீடு சதவீதங்களை முழுமையாகச் செயல்படுத்திட தனியாக கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை, அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் – சமூகநீதி பிறந்து தவழ்ந்து வளர்ந்த பெருமைக்குரிய தமிழ் மண்ணிலிருந்து கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7
“நீட்” தேர்வை ரத்து செய்க! “ப்ளஸ் டூ” மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திடுக!
“நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆர்வமின்மை மற்றும் தொடர் நடவடிக்கை இன்மை ஆகியவற்றின் காரணமாக, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்டு- அடுத்த வாய்ப்பாக அந்த மசோதாக்களை திரும்பவும் நிறைவேற்றி அனுப்பி சட்டமாக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் அதிகாரத்தையும் பறிகொடுத்த அ.தி.மு.க. அரசு, தற்போது அந்த “நீட்” தேர்வு மசோதாக்கள் குறித்தே பேசுவதை அறவே கைவிட்டு விட்டது. அதை மறக்கச் செய்திடும் நோக்கில், “நீட் தேர்வு எழுதி வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குகிறோம்” என்று அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்த அமைச்சரவை முடிவு அரசு ஆணையாக இதுவரை வெளியாகவில்லை.
அதுகுறித்து இதுவரை முதலமைச்சரோ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ கருத்து எதுவும் தெரிவிக்கவும் இல்லை. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து – மாணவி அனிதா உள்ளிட்ட மாணவ – மாணவிகளின் தற்கொலைக்குக் காரணமான “நீட்” தேர்வை பா.ஜ.க. அரசும் கைவிடுவதாக இல்லை. பா.ஜ.க.வின் கோபத்திற்கு ஆளாகிவிடு வோமோ என்ற பயத்தில், அ.தி.மு.க. அரசும் இதற்குமேல் அதுபற்றி வாய் திறந்து வலியுறுத்துவதாகத் தெரியவில்லை என்பதை இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.
இந்நிலையில், “கொரோனா பேரிடர் காலத்திலும் செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடக்கும்” என்ற மத்திய அரசின் அறிவிப்பைக்கூட எதிர்த்து இன்று வரை முதலமைச்சர் வழக்கம்போல கடிதமும் எழுதவில்லை; கோரிக்கையும் விடுக்க மனமில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள “நீட்” தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திட வேண்டும் என்றும், “இந்த ஆண்டு முதல் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசையும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 8
சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை-2020ஐத் திரும்பப் பெறுக!
கொரோனா பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின்சார திருத்தச்சட்ட மசோதா 2020; அத்தியாவசிய திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய அவசரச் சட்டங்களை நாடாளுமன்ற அமர்வில் இல்லாத நேரத்தில் நிறைவேற்றிய மத்திய அரசை இந்தக் கூட்டம் கண்டிப்பதோடு- இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
அதுமட்டுமில்லாமல், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களே திகட்டும் அளவுக்கு திருப்திப்படுத்து வதற்கு, “புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020”-ஐ வெளியிட்டு- அதன்மீது “கருத்துக் கேட்பு” என ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தற்பொழுது நடைமுறையில் உள்ள “2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை”யே இயற்கை வளங்களைப் பாதுகாக்க வும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் வழி வகுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குறைசொல்லி குற்றம்சாட்டி வருகின்ற நிலையில்- இந்தப் புதிய வரைவு அறிக்கை, “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986”யை ரத்து செய்வதற்கு நிகரான ஒரு அராஜகமான நடவடிக்கை என்று இக்கூட்டம் கருதுகிறது.
தமிழகத்தில் சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்று ஒட்டுமொத்தத் தமிழகமே எதிர்க்கிறது. காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அ.தி.மு.க. அரசின் துணையோடு மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் டெல்டா விவசாயிகளும்- மக்களும் கடுமையாக தினமும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இந்நிலையில் சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி” – அவற்றை எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்தும், “பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை” பலவீனப்படுத்தியும், “மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்குழு விற்கு மத்திய அரசே தலைவர் உறுப்பினர்களை நியமிக்க வழி செய்தும்” – கொண்டு வரப்பட்டுள்ள மாநில உரிமைகளுக்கு விரோதமான- ஜனநாயக விரோதமான சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. பாராளுமன்றம் கூடிய பிறகு ஏற்கனவே உள்ள “2006 சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கை 2006”யை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் – நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்திடும் வகையிலும் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 9
கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது!
திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளால் சித்தாந்த ரீதியாகவும், செயல்பாட்டு முறைகளாலும், யாரும் உட்புக இயலாத வண்ணம், நன்கு பண்படுத்தப் பட்டிருக்கும் தமிழகம், பா.ஜ.க.வின் கண்ணை உறுத்துகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதனால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, முன்னதாகவே ஊடக வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கிறார்கள். அதற்கு வசதியாக, நமது பாரம்பரிய பன்முகத் தன்மைக்கு முற்றிலும் எதிரான, ‘ஒரே சித்தாந்தம்’ என்பதில் ஈடுபாடு கொண்டுள்ள குறிப்பிட்ட ஒரு சிலரை அதிகாரப்படுத்தி அமர வைத்திட ஆங்காங்கே ஆசனம் தேடும் பிரயத்தனத்தில் இறங்கி யிருக்கிறார்கள். அப்படி இடம்பிடித்துக் கொடுத்து விட்டால், ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் பா.ஜ.க.வை உயர்த்திக் கோஷம் போடுவார்கள்; அந்த பொய் முழக்கத்தில் எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமையைத் தொடர்ந்து நசுக்கி வரும் மத்திய ஆளுங்கட்சியினரான பா.ஜ.க.வினர், தமிழக ஊடகச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் செயல்படத் தொடங்கி இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்களில் விவாதத் தலைப்புகள் தொடங்கி, நெறியாளர் – பங்கேற்பாளர்களைத் தீர்மானிப்பது வரை, தங்களின் அதிகாரக் கட்டளைக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கு இங்குள்ள அ.தி.மு.க. அரசும் துணை போகிறது. தேர்தல் கணக்கினால் ஏற்பட்டுள்ள அந்த எதேச்சதிகார ஆசை ஏற்பட்ட வேகத்திலேயே நிராசையாகிவிடும் என்பதை அவர்கள், சரித்திரத்தைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்து உணர வேண்டும்.
பா.ஜ.க. – அ.தி.மு.க.வின் கட்டளைகளுக்குப் பணிந்து, நடுநிலையைக் காவுகொடுக்கும் ஊடகங்கள், காலப் போக்கில் இருந்த இடம் தெரியாமல் மங்கி மறைந்துவிடும். அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’, கருத்துத் தணிக்கை காலகட்டத்திற்கு தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்க நினைப்பது, எள்ளளவும் பலிக்காது. அப்படியே பா.ஜ.க. – அ.தி.மு.க.வின் அழுத்தம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் ஆகிய வற்றிற்குப் பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளையும், கருத்துச் சுதந்திரத்தையும், நடுநிலையை யும்; ஊடகங்கள், இரண்டாம்பட்சமாகக் கருதி, பின்னிடத்திற்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொள்ளுமானால், தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்திட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும்.
ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; மக்கள் குரலே மகேசன் குரல்! மகத்தான அந்தக் குரலை, அச்சு – காட்சி ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், நெரிக்க நினைப்பது, மீள முடியாத கொடுந்தீமையில் வீழ்த்திவிடும். ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

அனைத்துக் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விவரம் :
தி.மு.க. – பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
காங்கிரஸ் – திரு. கோபண்ணா
ம.தி.மு.க. – திரு. மல்லை சத்யா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – திரு. கனகராஜ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – திரு. சி.மகேந்திரன்
விடுதலை சிறுத்தைகள் – திரு. ரவிக்குமார், எம்.பி.,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – திரு. அப்துல் ரஹ்மான்
மனிதநேய மக்கள் கட்சி – திரு. அப்துல் சமர்
கொங்குநாடு மக்கள்தேசிய கட்சி – திரு. சூர்யமூர்த்தி
இந்திய ஜனநாயக கட்சி – திரு. ஜெயசீலன்
தீர்மானம்:10
சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு; சமூகநீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கு மற்றுமொரு சான்று!
மாநிலங்கள் “மத்தியத் தொகுப்பிற்கு” ஒப்படைக்கும் மருத்துவக் கல்விக்கான (எம்.பி.பி.எஸ்; பி.டி.எஸ், முதுநிலை மருத்துவம்) இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு பெறும் அரசியல் சட்ட உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, சமூகநீதி அத்தியாயத்தில் மிக முக்கியமாகவும், சமூகநீதியை நிலை நாட்டுவதில் எப்போதுமே ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் முன்னணியில் நிற்கும் என்பதற்கும் மற்றுமொரு சான்றாகும். இந்தச் சமூகநீதிப் போராட்டத்தை நடத்தி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமையை நிலைநாட்டியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தக் கூட்டம் தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
“இடஒதுக்கீடு அளிக்க முடியாது” என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்ற மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவினை ஏற்று- நீதிமன்றம் அளித்துள்ள மூன்று மாத காலம்வரை காத்திராமல் உடனடியாக ஒரு கமிட்டியை அமைத்து, உரிய முடிவெடுத்து மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டிலேயே தமிழ்நாடு மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கும் இடங்களில் தமிழக அரசு சட்டப்படி பின்பற்றிவரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டையும், பட்டியலின மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும்- பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.