10ரூபாய் இருந்தால் போதும்; ‘மெட்ராஸைச் சுற்றிப் பார்க்கலாம்….’! சுற்றுலாத்துறை அசத்தல்

சென்னை:

ங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1ந்தேதி அன்று 10 ரூபாயில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்  என்று தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டு அசத்தி உள்ளது.

ஏராளமான பழையப் படங்களில் மெட்ராஸைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று கூறுவதும், அது தொடர்பான பாடல்களும் பாடப்பட்டு, மெட்ராஜ் குறித்து மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வந்தன. அதே வேளையில்,  சென்னை என்றதும் அதன் பிரிக்க முடியாத  கூவம் ஆறும் நினைவுக்கு வரும். இப்படியாகத்தான் இந்த சென்னை இன்று நாட்டின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

இந்த நிலையில்,  தமிழக சுற்றுலாத்துறை, புத்தாண்டு தினத்தில் 10 ரூபாய் கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா என திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுற்றுலா துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடன் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.

புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று திருவல்லிக்கேணி சுற்றுலாக்கழக அலுவலக வளாகத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும்.

சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத்திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேரலாயம், அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.

சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 15 பேருந்துகள் இதற்காக இயக்கப்பட உள்ளது. அந்த பேருந்துகள் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இயக்கப்படுகிறது.இதற்கு ரூ.10 கட்டணம் ஒருவருக்கு வசூலிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்து செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானலும் ஏறலாம், எங்கு வேண்டுமனாலும் இறங்கலாம்.

இது தொடர்பான கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 42531111 மேலும் தொடர்புக்கு 044-25333333, 25333857, 25333850 இந்த எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.