நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 10 பேரை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால், தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் தமிழ் செல்வன் ஆகியோர் எருமப்பட்டி அருகே உள்ள எஸ்.எஸ்.சேம்பர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 75), இவருடைய மகன் ஏழுமலை (37), இவருடைய மனைவி மகாலட்சுமி (35), இவர்களது மகன் நவீன்குமார் மற்றும் சாந்தி (17), துர்காதேவி (14) ஆகியோர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் அதிகாரிகள் மீட்டனர்.

இதே போல மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த குஞ்சாயூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (62), அவரது மனைவி ராஜாமணி (52), காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (60), அவரது மனைவி சாந்தி (50) ஆகியோரை மோகனூர் தாசில்தார் செல்வராஜ், துணை தாசில்தார் விஜயகாந்த் மற்றும் அதிகாரிகள் மீட்டனர்.

எருமப்பட்டி, மோகனூர் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த மொத்தம் 10 பேர் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.