சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், சுமார் 9ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

உலகநாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 9 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பியுள்ள நிலையில்,  மால்கள், கோவில்கள் போன்றவை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் கண்டிப்போடு உத்தரவுகளைப் பிறப்பித்து, அதன்படி செயல்பட அறிவுறுத்தி உள்ளன.

மேலம, மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளுக்குட்பட்டு, சின்னத்திரை (டிவி), வெள்ளித்திரை (சினிமா) ஆகியவற்றுக்கான படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நடத்த, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  சினிமா தியேட்டர்கள் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சினிமா தியேட்டர்களையும் உடனடியாக திறக்க மத்திய மாநில அரசுகள் வழிகாண வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை மேல் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக கடந்த இரு வாரத்திற்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு காணொலி முறையில்  தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள  திரையரங்க உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தியது.

அப்போது,  திரையரங்குகளை மீண்டும் திறந்தால் பாதுகாப்பான முறையில் நடத்துவதற் கான வழிமுறைகள் என்னென்ன, திரையரங்கு டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை, பார்வை யாளர்கள், மற்றும் சமூக இடைவெளி உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தியேட்டர் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்,  தியேட்டர்கள் மூடப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 6 மாதத்தில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தியேட்டர்கள் சம்மேளம் வேதனையோடு  தெரிவித்து உள்ளது.

சினிமா தியேட்டர்களை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற,  ‘‘சினிமா தியேட்டர்களை திறக்க வழி காணுங்கள். தியேட்டர் தொழிலாளர்கள், அதிபர்கள் வாழ்வாதாரத்துக்கு வழி காணுங்கள், சினிமாவைக் காப்பாற்றுங்கள்…’’ என்று திரைப்பட நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன.