வங்கியில் கொள்ளையடித்த 10 வயது சிறுவன்

மத்தியப்பிரதேச மாநிலம் நீமுஜ் மாவட்டம் ஜாவத் என்ற இடத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது.

நண்பகல் 11 மணி என்பதால் வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

கியூவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

வங்கி கேஷியர், தனது கேபின் அறையைப் பூட்டாமல் பக்கத்து அறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது கந்தல் உடை அணிந்திருந்த 10 வயது சிறுவன், வங்கியில் விறுவிறுவென நுழைந்து கேஷியர் அறைக்குள் சென்றான்.

அவரது கல்லாப்பெட்டியைத் திறந்து, இரண்டு ஐந்நூறு ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்து, தான் வைத்திருந்த பையினுள்  திணித்துக்கொண்டு சாவகாசமாக வெளியே வந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ஓட்டம் பிடித்தான்.

வங்கி ஊழியர்களோ, வாடிக்கையாளர்களோ கவனிக்காமல் 30 நிமிடங்களில் இந்த களேபரம் நடந்து முடிந்துள்ளது.

பணத்தைக் கொள்ளை அடித்து விட்டு,  ’’கொள்ளையன்’’ தப்பிச்சென்ற பிறகே வங்கியின் அலாரம் ஒலித்துள்ளது.

தகவல் அறிந்து வங்கிக்கு வந்த போலீசார் சி,சி.டி.வி. கேமிராக்களை ஆராய்ந்தும், வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தியும் தெரிய வந்த தகவல்கள் இவை:

கொள்ளை போன பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.

சம்பவம் நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் 20 வயது இளைஞன் ஒருவன் அந்த வங்கிக்கு வந்து ஓரமாகக் காத்திருந்தான்.

கேஷியர் தனது அறையை விட்டு நகர்ந்ததும், வெளியே நின்ற 10 வயது சிறுவனுக்குச் சமிக்ஞை கொடுத்துள்ளான், உள்ளே நின்ற இளைஞன்.

சிறுவனும் வந்தான். கேஷியர் அறைக்குள் நுழைந்தான். பணத்தை எடுத்தான். எஸ்கேப் ஆனான்.

அந்த சிறுவன், கேஷியர் டேபிளின் உயரம் கூட இல்லாததால், அவனை யாரும் கவனிக்க வில்லை.

மேஜர் திருடனையும், மைனர் கொள்ளையனையும் வலை வீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

-பா.பாரதி.