5 ஆண்டுகளில் பராமரிப்பு நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 1,100 குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் தத்தெடுக்கப்பட்ட 1,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ப்பு பெற்றோர்களால் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக நோடல் தத்தெடுப்பு அமைப்பு CARA தெரிவித்துள்ளது.

தங்களின் குடும்பத்துடன் ஒத்துப்போகாத காரணத்தால் பெரும்பாலான குழந்தைகள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதில் முக்கியமாக 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் தான் அதிகம் என்றும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிடிஐ மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்கப்பட்ட தகவலின் அடிப்படையில், 2014 – 15 காலக்கட்டத்தில் தான் அதிக குழந்தைகள் திரும்ப அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. மொத்தமாக தத்தெடுக்கப்பட்ட 4,362 குழந்தைகளில், 387 பேர் 2014-15ம் ஆண்டில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 2015-16ம் ஆண்டில் மொத்தம் 3,677 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட நிலையில், 236 குழந்தைகள் வளர்ப்பு பெற்றோர்களால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், 2016-17ம் ஆண்டில் தத்தெடுக்கப்பட்ட 3,788 குழந்தைகளில், 195 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 2017-18ம் ஆண்டில் தத்தெடுக்கப்பட்ட 3,927 குழந்தைகளில் 153 பேர் வளர்ப்பு பெற்றோர்களால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 2018-19ம் ஆண்டில் தத்தெடுக்கப்பட்ட 4,027 குழந்தைகளில், 133 குழந்தைகள் வளர்ப்பு பெற்றோர்களால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணைய அதிகாரிகள், “8 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளில் பாதி பேர், தத்தெடுத்த நபர்களின் குடும்பத்தினரோடு ஒருங்கிணைந்து செல்வதில்லை. அதனாலேயே திரும்பி அனுப்பப்படுகின்றனர். குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு, குழந்தைகள் பல்வேறு நபர்கள் மூலம் வந்து சேருவார்கள். தத்தெடுக்கும் குடும்பங்களுடன், அக்குழந்தைகள் தங்கவும், ஒருங்கிணைந்து செல்லவும் அக்குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் குழந்தைகள் தங்கள் பராமரிப்பாளருடன் ஒரு வலுவான பிணைப்பை வளர்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம், இதன் காரணமாக அவர்களை விட்டுவிட்டு ஒரு குடும்பத்திற்குள் செல்n அவர்கள் தயக்கம் காட்டுவார்கள். தத்தெடுக்கும் குடும்பத்தினரும், குழந்தைகளை பராமரிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும்.

குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் கூட ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்து செல்ல பழகிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்தவுடன், குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட வகுப்பில் அக்குழந்தைகளை சேர்ப்பார்கள். குழந்தை தனது சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும் பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். இதன் காரணமாக குழந்தை பராமரிப்பு நிறுவனங்களிலேயே தனது நண்பர்களுடன், தான் நன்றாக இருப்பதை மீண்டும் குழந்தை நினைவுப்படுத்தி, நிறுவனத்திற்கு திரும்பி வர ஆசையை வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் சமூக நல வாரியம் இருக்கும். ஆனால் அவை பெரும்பாலான மாநிலங்களில் செயலிழந்துவிட்டன. இந்த வாரியங்களை மேம்படுத்தினால், நிச்சையமாக பொதுசேவையில் ஈடுபட முடியும். ஆனால் களத்தில் வாரியம் செயல்பாட்டிற்கு வராத நிலையே தொடர்கிறது. இந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 273 குழந்தைகள் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, மத்தியப் பிரதேசத்தில் 92 குழந்தைகளும், ஒடிசாவில் 88 குழந்தைகளும், கர்நாடகாவில் 60 குழந்தைகளும் திருப்பி அனுப்பட்டிருக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மனித நடத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் நிமிஷ் ஜி தேசாய், “இந்த அனுபவம் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாகவே இருக்கும். குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் வாழும் குழந்தைகள், ஏற்கனவே தங்களின் வாழ்க்கையின் ஆரம்பத்தில் தாங்கள் நிராகரிக்கப்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.