போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி செல்ல முயன்ற டெல்டா விவசாயிகள் 100 பேர் கைது!

திருச்சி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில்,  தமிழகத்தில் இருந்து டெல்லி போராட்டத்துக்கு செல்ல முயன்ற டெல்டா விவசாயிகள்  100 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 8வது நாளாக தொடர்கிறது.  அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி சலோ போராட்டத்துக்கு ஆதரவாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அங்கு குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், : டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் இருந்து டெல்லி செல்ல  டெல்லி பாசன விவசாயிகள்  100 பேர் முயற்சி மேற்கொண்டனர். அவர்கள் திருச்சி ரயில் நிலையம் வந்தபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்பட பலர், போராட்டத்தில் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில் வீட்டுக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.