சென்னை: 2020 கல்வியாண்டிற்கான பொறியியல் கவுன்சிலிங் நடைபெறவுள்ள நிலையில், முறையான உள்கட்டமைப்பு வசதியற்ற 100 பொறியியல் கல்லூரிகளின் இணைப்பு அந்தஸ்தை ரத்துசெய்யும் நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா பல்கலையின் இணைப்புப்பெற்ற பொறியியல் கல்லூரிகள் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பது அவசியம். இல்லையெனில், ஆய்வின் மூலம் அவை கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில், இந்தாண்டு 100 பொறியியல் கல்லூரிகள் செயல்படுவதற்கு தகுதியற்றவை என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இக்கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலையின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இணைப்பு ரத்துசெய்து, அந்தக் குறிப்பிட்ட கல்லூரிகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது அண்ணா பல்கலை. மேலும், குறைவான மாணாக்கர் சேர்க்கையும் கணக்கில் கொள்ளப்பட்டது.

ஆனால், இதனை எதிர்த்து சில கல்லூரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. எனவே, அந்த வழக்குகளில் வழங்கப்பெறும் தீர்ப்புகளைப் பொறுத்தே, அண்ணா பல்கலையின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்று கூறப்படுகிறது.