100கிராம் தயிர் 972 ரூபாய்: ரெயில்வே உணவு பொருட்கள் வாங்கியதில் பெரும் ஊழல்!

 

டில்லி,

ரெயில்வே துறையில் உணவு பொருட்கள் வாங்கியதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகி உள்ளது.

அதில், 100 கிராம் தயிர் 972 ரூபாய்க்கும், ஒரு லிட்ட எண்ணை 1241 ரூபாய்க்கும் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ரெயில்வேத்துறை கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) கேன்டீன் விற்பனையாளர்கள் தண்ணீர், டீ, காபி, சாப்பாடு உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பதாக ஏற்பட்ட புகார்களை தொடர்ந்து   ஐஆர்சிடிசி மூலம் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருள்களின் விலை பட்டியலும் ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், காபி, டீ 7 ரூபாய், தண்ணீர் 15 ரூபாய், காலை சிற்றுண்டி 30 ரூபாய், மதிய உணவு 50 ரூபாய். விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டதை விட கூடுதல் விலைக்கு விற்றால் புகார் அளிக்க வேண்டும் என்று பயணிகளுக்கு ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், தற்போது உணவு பொருட்கள் கொள்முதல் செய்வதில் ரெயில்வேதுறையில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர் அஜய் போஸ் என்பவர் ஏற்கனவே கேட்டிருந்த  கேள்விக்கு சரியான தகவல்கள் அளிக்காத நிலையில், மீண்டும் இரண்டாவதாக இதுகுறித்து மனுதாரர் அஜய் போஸ் மனு அளித்திருந்தார், அதில் உணவுபொருட்கள் அதிகவிலைக்கு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து  அஜய்போஸ் கூறியதாவது,

கடந்த வருடம் ஜூலை 2016 ல் ரெயில்வே கேட்டரிங் துறை மூலம் வாங்கப்படும் உணவு பொருட்கள்  குறித்து விண்ணப்பம் தாக்கல் செய்தேன்,  ஆனால் கேட்டரிங் துறையினர் அதில் சிலவற்றை  மறைக்க விரும்பினார்கள்.  எனவே நான் மேல்முறையீடு செய்தேன்.

அதைத்தொடர்ந்து, ரெயில்வே அதிகாரி 15 நாட்களுக்குள், நான் கேட்கும் விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டரிங் துறை நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.

ஆனால், எனது கேள்விகளுக்கு பல மாதமாக எந்தவித பதிலும் ரெயில்வே கேட்டரிங் துறை பதில் அளிக்காமல், தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது என்றார்.

அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மனு செய்ததாகவும், அதன்பின்னர்தான்  ரெயில்வே துறை சார்பாக தனக்கு பதில் கிடைத்தது என்றார்.

ஆனால், அதில் ரெயில்வே கேட்டரிங்துறை அளித்துள்ள பதிலைப் பார்த்ததும் நான் அதிர்ச்சி யுற்றேன். 100 கிராம் அளவுள்ள தயிர் ₨ 972 க்கு வாங்கியதும், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணை,  ஒரு லிட்டர் ரூ.1241க்கு வாங்கியுள்ளது தெரிய வந்தது.

இதன் காரணமாக ரெயில்வேதுறை, உணவு பொருட்களை சந்தை விலையை விட அதிக விலையில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

இவ்வாறு ரெயில்வே கேட்டரிங் துறையால் வாங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சி.எஸ்.டி.எம்.ன் கிடங்கில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து  ஐ.ஆர்.சி.டி.சி ஜான் அஹார் கான்டின்கள், ரயில்வே அடிப்படை சமையலறை மற்றும் டெக்கான் ராணி, குர்லா-ஹஸ்ரத் நிஜாமுடின் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஒரு வருட காத்திருப்புக்குப் பிறகுதான் எனக்கு விவரங்கள் வழங்கப்பட்டன,. ஆனாலும் ஒரு வருட முழு விவரமும் எனக்கு அளிக்கப்படவிர்லை,   ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே தகவல் கிடைத்ததுள்ளது என்றார்.

மேலும், இந்த விவரங்களில்  தேங்காய், பருப்பு, பிசின் மற்றும் திசு காகிதம் போன்ற பொருட்கள் அதிக விலைக்கு  வாங்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.  இத்தகைய மோசடிகளால் ரெயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதும் இதன்மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.

மேலும் ஆடிஐ மூலம் வாங்கப்பட்ட தகவலில் பெரும் குழப்பம் உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
ரயில்வே அறிக்கையின்படி,  ஜெனரல் அஹார் கான்டென்ஸ் மற்றும் எல்.டி.டீ. மற்றும் இதர நிலையங்களில் விற்பனை நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டுள்ளது என்றும் போஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து கவனத்தில் எடுத்துக்கொள்வதாக ரெயில்வே மேலாளர் ரவீந்திர கோயல் கூறினார். மேலும்  முன்னாள் பொது மேலாளரான சுபோத் ஜெயின் கூறுகையில், இந்த பொருட்கள். கொள்முதல் குழு விகிதங்களில் இருப்பதாக கூறி உள்ளார்.

மேலும், இதுகுறித்து பேசிய மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, சி.எஸ்டிஎம் கேட்டரிங் எடுக்கும்போது கடந்த காலங்களில் சில மோசடிகளில் ஈடுபட்டது என்றும், இதன் காரணமாக  ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே பல ரூபாய் கோடி இழப்புக்களைக் காட்டுகிறது என்றும்,  இது போன்ற மோசடிகளை  தீவிரமாக கவனிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்..

இது ரெயில்வே துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.