பெங்களூரு: பெங்களூருவில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரின் 100க்கும் அதிகமான வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது மத்திய அரசின் வாதமாகும்.

இந் நிலையில், வடக்கு பெங்களூருவின் கரியம்மன அக்ரஹாரா பகுதியில் ஏராளமான வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக குடியிருந்து வருவதாக பாஜக எம்எல்எஏ அர்விந்த் லிம்பாவள்ளி புகார் கூறி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் இது பற்றி விரிவாக தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த வீடுகளுக்கான மின்சாரத்தையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர்.  அதன் அடுத்த கட்டமாக அந்த 100க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தரை மட்டமாக்கினர்.  அங்கிருந்த அசாம், திரிபுராவினரை கர்நாடகாவில் இருந்து காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

முன்னதாக, ஜனவரி 11ம் தேதி, பெங்களூரு போலீசார் ஒரு நோட்டீசை அனுப்பி இருந்ததது. சரியான ஒப்புதல் இல்லாமல் நிலத்தில் கொட்டகைகள் கட்டப்பட்டதாக கூறியது.

அந்த கொட்டகைகள் சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறியவர்களை வைத்திருப்பதாக போலீசார் கூறினர், மேலும் நோட்டீஸ் உரிமையாளரிடம் அத்துமீறல்களை அகற்றி குடியிருப்பாளர்களின் விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்த சூழ்நிலையில் தான் அந்த வீடுகளை மாநகராட்சி நிர்வாகம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளியது. ஆனால், அங்கு குடியேறியவர்கள், இந்தியர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று கூறி உள்ளனர்.

அவர்கள் கூறி இருப்பதாவது: நாங்கள் வங்கதேசத்தினர் அல்ல. நாங்கள் இந்தியர்கள் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. நாங்கள் இங்கு வேலைக்கு வந்துள்ளோம்.

என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் வாழ ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்கிருந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.