பாஜக சிசுபாலன் மோடியின் 100 தவறுகள் : காங்கிரஸ் பிரசார புத்தகம்

--

மும்பை

க்களவை தேர்தலின் பிரசாரத்தில் ஒரு பங்காக மோடியின் தவறுகள் குறித்த புத்தகத்தை நேற்று காங்கிரஸ் வெளியிட்டது.

 

புராணத்தில் கிருஷ்ணருக்கு எதிராக சிசுபாலன் என்னும் அரக்கன் செயல்பட்டு வந்தான். கிருஷ்ணரின் அத்தையான சிசுபாலனின் தாய் கிருஷ்ணரிடம் தனது மகனை வதம் செய்யக்கூடாது என வரம் கேட்டாள். அதற்கு கிருஷ்ணர் சிசுபாலன் செய்யும் 100 தவறுகள் வரை தாம் மன்னிப்பு அளிப்பதாகவும் அதற்கு மேல் தவறுகள் செய்தால் அவனை வதம் செய்யப் போவதாகவும் வரம் அளித்தார். அதன்படி 100 தவறுகளை தாண்டியதும் சிசுபாலன் வதம் செய்யப்பட்டான்.

மக்களவை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கும் வேளையில் இந்த புராண சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மகாராஷ்டிரா காங்கிரஸ் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தின் பெயர் “பாஜக சிசுபாலன் மோடியின் 100 தவறுகள்” என்பதாகும். அந்த புத்தகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து செய்த தவறுகளாக 100 தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

 

இந்த புத்தகத்தில் “பாஜக அரசுக்கு கடந்த 2014 ஆம் வருடம் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்தது. ஆனால் அரசு நிர்வாகத்தில் பாஜக தோற்று விட்டது. தற்போது பொதுமக்கள் தங்கள் பிரதிநிதிகளை உண்மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துள்ளது. மோடி அரசு செய்த தவறுகளை மறக்கக்கூடாது.

மோடி அடிக்கடி புராணக்கதைகளை எடுத்துக்காட்டாக கூறி வருகிறார். அதில் சிசுபாலன் கதையும் ஒன்று, கிருஷ்ணர் சிசுபாலனின் 100 தவறுகளை பொறுத்தது போல் மக்களும் பாஜகவின் சிசுபாலனான மோடியின் 100 தவறுகளை பொறுத்துக் கொண்டுள்ளனர். இனிமேல் அவர்கள் அதற்கான தண்டனையை மோடிக்கு அளிப்பார்கள்.

கடந்த 2016 ஆம் வருடம் பாஜக அரசு ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்க பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் இட்டது. அந்த ஒப்பந்தப்படி மோடி அரசு 38 விமானங்களை ரூ.58,000 கோடிக்கு வாங்க உள்ளது. இது காங்கிரஸ் அரசின் விலையை விட மூன்று மடங்கு அதிகமாகும். அதைத் தவிர மோடி பிரான்ஸ் அரசை அனில் அம்பானியை டசால்ட் நிறுவனத்துடன் பங்குதாரராக அமைத்துக் கொள்ள வற்புறுத்தி உள்ளார்.

இது முழுக்க முழுக்க கோடிக்கணைக்கில் அரசுப் பணத்தை மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு அளிப்பதற்காக நடந்த திட்டமாகும். இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் நிறுவனம் உலக அளவில் விமான தயாரிப்பில் புகழ் பெற்றுள்ளது. ஆனால் அனுபவமே இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஆளும் கட்சியின் சிபாரிசால் இந்த ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.