வெள்ள நிவாரணப் பணியில் 100 தேசிய பேரிடர் மீட்புக் குழு

டில்லி

நாடெங்கும் 71 இடங்களில் வெள்ள நிவாரண பணிக்காக 100 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது.  இதனால் கடும் வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.   குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நலசோபாரா மற்றும் பால்கார் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.     பால்கார் பகுதியில் தாழ்வான இடங்களில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்  படையினர்  மிகவும் உதவி வருகின்றனர்.    டில்லியில் அமைந்துள்ள இந்த படையின் தலைமையகம் அவசர உதவிக்காக முழுவதுமாக பணிபுரிந்து வருகின்றது.   இவர்களை எந்நேரமும் அணுக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.   அத்துடன் இந்தப் படையினர் வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல துறைகளுடன் எப்போதும் தொடர்பில் இருந்து மீட்புப் பணியை நடத்தி வருகின்றனர்.

தற்போது 4500 பேர் கொண்ட 100 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடெங்கும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.   இவர்கள் தற்போது வெள்ள அபாயம் உள்ள 71 இடங்களில் தயார் நிலையில் உள்ளனர்.   இது தவிர மேலும் சில குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.   ஒவ்வொரு குழுவிலும் 45 பேர் உள்ளனர்.   எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவ இவர்கள் தயாராக உள்ளனர் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.