ஸ்ரீரங்கம் கோவிலில் புதிய நூறு கால் மண்டபம் கண்டுபிடிப்பு!! பக்தர்கள் மகிழ்ச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நூறு கால் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

108 வைனவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இங்கு புணரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு பணிகள் மேற்கொள்ளும் போது மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல அதிசயங்கள் வெளி ச்சத்திற்கு வருகிறது.

 

அந்த வகையில் கோவிலில் சூர்ய புஷ்கரணியில் உள்ள பிரசாத ஸ்டாலை பழைய அன்னதான கூடத்திற்கு மாற்றும் பணிகள் நடந்தது. அப்போது பிரசாத ஸ்டால் இருந்த இடத்தில் நூறு கால் மண்டபம் ஒன்று மறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த மண்டபத்தை புணரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இவ்வளவு நாள் பிரசாத ஸ்டால் நூறு கால் மண்டபத்தை மறைத்துக் கொண்டு இருந்தது என்பதை நாங்கள் யாரும் அறியவில்லை.

ஸ்டால் சிறிய பகுதியில் தான் செயல்பட்டு வந்தது. ஆனால், இதன் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் சமையற்கூடம், விறகு, மளிகை பொருட்கள் ஆகியவை இருந்தது. இந்த மண்டபம் முழு அளவில் பார்வைக்கு தென்படவில்லை. இதன் அளவு மட்டும் 11 ஆயிரத்து 900 சதுர அடி உள்ளது. நூறு கால்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த மண்டபத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம்பெருமாள் சன்னதியில் இருந்து புறப்பாடாகி வந்து எழுந்தருளும் வைபவம் நடக்கும் என்பது வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் அடுத்து வரும் கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறும். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி மீண்டும் நடைபெறவுள்ளது’’ என்றார்.

ஆயிரம் கால் மண்டபத்திற்கு புகழ்பெற்ற ஸ்ரீரங்கத்தில் தற்போது புதிதாக நூறு கால் மண்டபம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.