சென்னை:
மிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த வேண்டும், 100 சதவிகிதம் ஊரடங்கு தளர்த்த வாய்ப்பில்லை  என்று சென்னை வந்துள்ள  மத்திய மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்)  துணை இயக்குனர் பிரதீப் கவுர்  தலைமையில் மருத்துவர்கள் குழு தமிழகம் வந்து ஆய்வு செய்து வருகிறது.
முன்னதாக இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர்,துணைமுதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்பட உயர்அதிகாரிகளுடன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியது. அப்போது,  தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக தளர்த்த வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎம்ஆர் துணைஇயக்குனர் பிரதீப் கவுர்,  மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. இந்த பரிசோதனையை குறைக்கக்கூடாது என முதல்வரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.
அதிக அளவிலான பரிசோதனை நடந்ததால்தான், இந்த அளவுக்கு கொரோனா பரவல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  பாதிப்பு அதிகரிப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை.  பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும். கொரோனா தொற்றுக்கு காரணமானவர்களை கண்டறிவது தமிழகத்தில் சிறப்பாக உள்ளது.
தமிழகத்தில் தான் மரணமடைந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது.
பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அங்கு, ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க் வழங்க வேண்டும். மாஸ்க் அணிந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை. படிப்படியாகத்தான் குறைக்க வேண்டி உள்ளது, ஊரடங்கு தொடரும். ஊரடங்கை நீட்டிப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை . தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.