திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி: சமத்துவ மருத்துவர்கள் சங்கம் கண்டனம்…

சென்னை: திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு  சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பல திரைப்படங்கள் ரிலீசாகவுள்ளதால், தியேட்டர்களை முழுமையாக திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, தமிழகஅரசு, பொங்கல் முதல் 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் கொரோனா முழுமையாக குணமடையாத நிலையில், அரசின் அறிவிப்புக்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கொரோனா பரவும் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல், 70 விழுக்காடு வேகமாக பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக்கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானது. இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். ச

மூக இடைவெளியை பரமாரிக்க வேண்டும், கூட்டம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த எட்டு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்திடவும், கொரோனா பரவலை தடுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவத்துறை பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர். பலர் உயிரையும் தியாகம் செய்துள்ளனர். கொரோனா பரவும் வகையில் அரசு செயல்படுவது, மருத்துவப் பணியாளர்களையும், முன்களப் பணியாளர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும்.

கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான திரைத்துறையினருக்கு இழப்பீடு வழங்கலாமே ஒழிய, அவர்கள் நலன் காத்தல் என்ற பெயரில் கொரோனாவை பரப்ப வழி வகுத்தல் சரியல்ல. அறிவார்ந்த செயலாகாது.

எனவே, தமிழ்நாடு அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திரைத்துறையினரும் சமூகப் பொறுப்போடு செயல்பட வேண்டும். தங்களது ரசிகர்களும், அவர்களின் குடும்பங்களும் கொரோனாவால் பாதிக்காமல் காக்கும் கடமை முன்னணி திரை நட்சத்திரங்களுக்கும், அக்கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்”

இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.