சாய்பாபா நூற்றாண்டு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் ஷீரடி

ஷீரடி:

சாய்பாபாவின் 100வது ஆண்டு சமாதி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ஷீரடியில் குவிந்து வரு கின்றனர். தற்போது நாடு முழுவதும் தசரா பண்டிகை கால விடுமுறை தினம் என்பதால் கோயில் நகரமான  ஷீரடி மக்கள் கோட்டையாக திகழ்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். பிரசித்தி பெற்ற இந்த ஸ்தலத்தில் இன்று அவர் சமாதியான  100வது ஆண்டின் இறுதிநாள் பூஜை நடைபெற உள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஷீரடி முழுவதும் மக்கள் தலைகளாக காணப்படுகிறது.

வியாழக்கிழமை என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது சாய்பாபாவும் குரு பகவானும் தான். மிக எளிமையாக வாழ்ந்து, இந்து உலகுக்கு நல்லது செய்மு முக்தி பெற்று ஜீவ சமாதி அடைந்தவர் சாய்பாபா என்பதால், அவரை வேண்டிய விரதம் இருப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று சமாதி அடைந்தார்.

1918ம் ஆண்டு தசரா காலத்தின்போது பாபா மறைந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில்,  அக்டோபர் 1 முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த பூஜைகளில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  ஷீரடியில் குவிந்து வருகின்றனர். சுமார்  10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கே தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஷீரடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 750 ஓட்டல்களில் உள்ள ஏறக்குறைய 1500 அறைகளை பக்தர்களை முன்பதிவு செய்திருந்தனர். மேலும் ஏராளமான மண்டபங்களிலும்  பக்தர்கள் தங்குவதற் காக  ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சுமார் 500 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப் பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

சாய்பாபா கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் வகையில், 1922ம் ஆண்டு 3200  ரூபாயில் ஸ்ரீரடி டிரஸ்ட் தொடங்கப்பட்டது. தற்போது இந்த டிரஸ்டின் வருமானம் ரூ.371 கோடி என கூறப்படுகிறது.

சாய்பாபாவின் 100வது ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு, ஸ்ரீரடி – விஜயவாடா, ஷீரடி – ராஜமுந்திரி  இடையே சிறிய ரக விமானம் உதான் திட்டத்தின்மூலம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமான சேவை அக்டோபர் 15ந்தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பக்தர்கள் தங்குவதற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

சாய்பாபா பிறந்தது மற்றும் ஜீவ சமாதி இரண்டுமே வியாழக்கிழமை என்பதால், சாய்பாவை வணங்க வியாழக்கிழமையை சிறந்தநாளாக அவரது பக்தர்கள் கொண்டாடி வருகிறார்கள்.