உத்தரபிரதேசம்: 100 வயது மூதாட்டிக்கு கிடைத்த முதல் அடையாள ஆவணம்

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் அலிநகர் பகுதியை சேர்ந்தவர் நூர்ஜகான். நூறு வயதை எட்டியுள்ள ஏழை விதவையான இவர் தனது மகள் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள ஷெட்டில் வசித்து வருகிறார்.

நீண்ட போராட்டத்திற்கு பின் தனது முதல் அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை நேற்று பெற்றுக் கொண்டதால் இவரது சுருக்கம் நிறைந்த முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது. இதற்கு காரணம் இத்தனை நாட்கள் மறுக்கப்பட்டு வந்த முதியோர் பென்சன், ரேசன் பொருட்கள் உள்ளிட்டவை இனி கிடைக்க போகிறது என்ற மகிழ்ச்சி தான்.

அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சித் யாதவ், பத்திரிக்கையாளர் மித்ரா பிரகாஷ் மற்றும் ஒரு குழந்தை நல ஆர்வலர் ஆகியோர் இந்த மூதாட்டியை ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்துச் சென்று ஆதார் எண்ணை வாங்கி கொடுத்துள்ளனர். இது வரை அவருக்கு ஒரு அடையாள ஆவணம் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையில் அவரது பிறந்த தேதி 1.1.1918 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.