விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றம்: திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… வீடியோ

சென்னை: நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக, முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அறிவித்தபடி இன்று மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்ட்டு உள்ளது.

முதல்கட்டமாக தற்போது  வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திறக்கப்படும் நீர் அதிகரிக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3500 கனஅடி வரை தண்ணீர்  திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியை  கண்காணிப்பு பொறிழயாளர்  முத்தையா உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று  ஆய்வு நடத்தினர். தற்போது  செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடி நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  செம்பரம்பாக்கத்தில் ஏரியில் மொத்தம் 19 மாதங்கள் உள்ள நிலையில் ஏழு மதகுகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் வாய்க்கால் வழியாக அடையாற்றில் கலந்து கடலுக்கு செல்லும். இதனால் அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட  பெரு வெள்ளத்தின்போது,. செம்பரம்பாக்கம் ஏரி  திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு,  தற்போது (2020 நவம்பர் 25ந்தேதி) மீண்டும்  செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து கூறிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டாலும்,  அடையாறு ஆற்றில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை நீர் செல்லும் திறன் உள்ளது. இதனால், பொதுமக்கள்  அச்சம் தேவையில்லை. இருந்தாலும் கரையோரப் பகுதி மக்கள் அரசின் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும்,  சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.