Random image

புல்லட் ரெயில் அமைப்பில் விதி மீறல் : ஜப்பானுக்கு ஆயிரம் விவசாயிகள் கடிதம்

கமதாபாத்

புல்லட் ரெயில் அமைப்பதில் விதி மீறல்கள் நடந்துள்ளதால் இந்த திட்டத்துக்கான நிதி உதவியை நிறுத்தி வைக்குமாறு 1000 விவசாயிகள் ஜப்பான் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மோடியின் கனவுத் திட்டம் என கூறப்படும் மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மோடியால் தொடங்கப்பட்டது.    இந்த திட்டத்துக்காக குஜராத்தில் சுமார் 1400 ஹெக்டேர் நிலமும் மகாராஷ்டிராவில் 1120 ஹெக்டேர் நிலமும் கையைகப்படுத்த உள்ளது.   இந்த நிலங்கள் தனியாருக்கு சொந்தமானதாகும்.   இதில் விவசாய நிலங்களும் அடங்கும்.

இந்த திட்டத்துக்கு ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சி ரூ.1,10,000 கோடி கடன் உதவி வழங்க உள்ளது.   அந்த ஏஜன்சி இந்த திட்டம் குறித்து பல விதிமுறைகளை அறிவித்துள்ளது.  தற்போது இந்த திட்டத்துக்கான நிலம் கையக்கப்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   குறிப்பாக குஜராத் மாநில விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை தொடர்ந்துள்ள ஆயிரம் விவசாயிகளைக் கொண்ட அமைப்பு ஜப்பான் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.   அந்த கடிதம் குறித்து அமைப்பின் வழக்கறிஞர் ஆனந்த் யக்னிக், “இந்த புல்லட் ரெயில் அமைப்பதில் ஜப்பான் அரசு தெரிவித்த பல இனங்களில் விதி மீறல் நடந்து வருகிறது.   இதை ஜப்பான் அரசு கண்காணிக்க வேண்டும்.

இந்த திட்டத்துக்கு கடன் உதவி செய்ய உள்ள ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சி இந்த விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.   இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 1000 விவசாயிகள் அமைப்பு தொடரப்பட்ட  வழக்கு நிலுவையில் உள்ளது.   அந்த வழக்கு முடியும் வரை இதற்கான கடன் தொகையை நிறுத்தி வைக்க வேண்டும்.   அத்துடன் இது குறித்து விளக்கம் அளிக்க ஜப்பான் தூதரை சந்திக்க நேரம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.