சென்னை,

டாஸ்மாக் மதுவிற்பனை மூலம் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் கூடுதலாக 1,149 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் அகற்றப்பட்ட தும், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி ஆகியோர் தலா 500 கடைகளை மூட உத்தரவிட்டப் பிறகும் நடப்பாண்டியில் டாஸ்மாக் மூலம் வருமானம் அதிகரித்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளதுமு.

நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில், தமிழகத்தில் மது விற்பனையில்லாத நாட்கள் ஐந்திலிருந்து இருந்து 8 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் தொடர்புடைய நாட்கள் மது விற்பனையில்லாத நாட்களாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2016-2017ம் ஆண்டில் மது விற்பனை மூலமாக அரசுக்கு வருவாய் மற்றும் மதிப்புக் கூட்டு வரி மூலம் 26,995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 1149 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருந்த 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உச்சநீதி மன்ற உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளை, அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் திறக்க தமிழக அரசு முயன்றபோது, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம், கோர்ட்டில்  தமிழக அரசு, டாஸ்மாக் வருமானம் குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறி, அதனால் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

ஆனால், தற்போது சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் 1,149 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு கோர்ட்டை ஏமாற்றியதா?  அல்லது அரசு மக்களை ஏமாற்றுகிறதா?