ஐதராபாத்:

ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 29ம் தேதி தொடங்கி வைக்கிறார். அதோடு 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவங்கா டிரம்ப் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின் தொடக்க விழா பாதுகாப்புக்கு 10 ஆயிரத்து 400 போலீசார் பல்வேறு நிலைகளில் ஈடுபட்டிருப்பதாக தெலங்கானா டிஜிபி மகேந்தர் ரெட்டி தெரிவித்தார்.

போக்குவரத்து, மத்திய ஆயுதப் படை, தெலங்கானா மாநில சிறப்பு போலீஸ், நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு, நக்சல் எதிர்ப்பு படை, தீவிரவாத எதிர்ப்பு படை, நாய் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் இதில் இடம்பெறுவார்கள்.

மோடி, இவங்கா உள்பட 100 சிறப்பு விருந்தினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். அமெரிக்காவில் ரகசிய சேவை பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே ஐதராபாத்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும், ஏற்பாடுகளையும் ஆய்வு செய்துள்ளனர். இவங்கா டிரம்புக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள 3 ஆயிரத்து 500 வீடுகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வீடுகளில் யாரும் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஃபாலாக்னுமா அரண்மனையை சுற்றி மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.