சாமியார்கள் கொலையில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பு இல்லை: மகாராஷ்டிரா அமைச்சர் விளக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் சாமியார்கள் கொலையில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சில நாட்கள் முன்பு காரில் சென்ற 3 பேரை அப்பகுதி மக்கள் மடக்கி நிறுத்தினர். திருடர்கள் என்று கூறி, அந்த 3 பேரையும் கட்டையால் சரமாரியாக அடித்துக் கொலை செய்தனர்.

இதுபற்றி காசா போலீஸ் விசாரணையில் காரில் வந்தவர்கள், மும்பை அருகேயுள்ள கந்திவேலி பகுதியைச் சேர்ந்த சிக்னே மகராஜ் கல்பவ்ரூக்‌ஷகிரி, சுஷில்கிரி மகராஜ், ஓட்டுநர் நிலேஷ் தெல்கட் என்று  தெரியவந்தது.

அவர்கள், சூரத்தில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு காரில் புறப்பட்டு வந்ததும் தெரிந்தது. திருடர்கள் என்று தவறாக கருதி தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந் நிலையில், தாக்குதல் தொடர்பாக 101 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர்கள் இல்லையென அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தற்போது தெரிவித்திருக்கிறார். தாக்குதலுக்கு மதச்சாயம் பூச முற்படுவதாக மாநில எதிர்க்கட்சியான பாஜகவை தேஷ்முக் விமர்சித்துள்ளார்.

சிலர் இதனை அரசியலாக்க முயல்கின்றனர். அதற்கான நேரம் அல்ல. தற்போது கொரோனாவுக்கு எதிராக ஓரணியில் நின்று எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்