டெல்லி:

லைநகர் டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாகவும் கூறி உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 20 வயதினர்- 9% பேர் என்றும், , 21-40 வயதினர் 42% பேர் என்றும், 41-60 வயதினர் -33%, 61 வயதுக்கு மேல் 17% என்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 22ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில்,  தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் அந்த அமைப்பின் மஸ்ஜித் ஆறு மாடிக் கட்டிடத்தில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில்  17 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு, வெளிநாட்டினர் மூலம்  நோய் தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே இடத்தில் தங்கியிருந்ததும், அவர்களுக்கு ஒரே இடத்தில் உணவு பரிமாறப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பரவியுள்ளது.

இதற்கிடையில், இந்த மாநாட்டில் கலந்துகொண்ட  7 இந்தோனேசியர்கள் மற்றும் கேரளா, கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேர், உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும, டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், அவர்களிடம் தொடர்புடையவர்கள்  என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்த  58 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த மாநாட்டிற்குச் சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 515 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும், 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுஉள்ளது. பலர் தாமாகவே முன்வந்து சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.