மாசசூசெட்ஸ்

மாசசூசெட்ஸ் நகரில் ஒரு 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததை ஒட்டி  குளிர்ந்த பீர் அருந்திக் கொண்டாடி உள்ளார்.

அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் நகரில் வசித்து வரும் ஜென்னி ஸ்டெஜ்னா என்னும் 103 வயது மூதாட்டி போலிஷ் அமெரிக்கன் கலப்பினப் பெண்மணி ஆவார்.  இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையிலிருந்ததாக அவரது கொள்ளுப் பேத்தி ஷெல்லி கன் தெரிவித்துள்ளார்.   கொரோனா  பாதிப்பு ஏற்பட்ட புதிதில் நன்கு காணப்பட்ட அவர் உடல்நிலை அதன் பிறகு மோசமானது,

மிகவும் மோசமான நிலையில் இருந்த அவர் இறந்து விடுவார் என தெரிவிக்கப்பட்டது.  இதை அடுத்து ஷெல்லியின் கணவர் ஆடன் கன் பாட்டியிடம் சொர்க்கத்துக்குச் செல்ல தயாரா எனக் கேட்டுள்ளார்.  அதற்குப் பாட்டி நரகத்துக்கும் தயார் என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.   ஆனால் அடுத்த நாள் காலை அவர் உடல் நிலை முன்னேற்றம் அடைந்தது மருத்துவர்களுக்கே ஆச்சரியம் அளித்துள்ளது.

பாட்டியைப் பார்க்க வரும் உறவினர்களிடம் அவர் தாம் மிகவும் நலமுடன் உள்ளதாகவும் கூட்டம் கூடுவது தமக்குப் பிடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  அதன் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு நெகடிவ் ஆகி உள்ளது.  இதையொட்டி குடும்பத்தினருடன் பாட்டி அதைக் கொண்டாடி உள்ளார்.  படுக்கையில் இருந்தபடி அவர் குளிர்ந்த பீர் ஒன்றை அருந்தி தனது கொள்ளுப்பேத்தி மற்றும் கொள்ளுப்பேத்தியின் கணவருடன் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டுள்ளார்.