‘’பிறவி அறிவாளி’’களுக்கு எம்ஜிஆர் பெரிய ‘’லூசு’’தான்! ஏழுமலை வெங்கடேசன்

--

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

‘’பிறவி அறிவாளி’’களுக்கு எம்ஜிஆர் பெரிய ‘’லூசு’’தான்

எம்ஜிஆர் ஒன்றும் நிர்வாகத்தில் பெரிய புலி கிடையாது..

ஆனால் அவர் காலத்தில், அப்போதிருந்த நிலைமைக்கு ஏற்ப மனிதாபிமானத்தோடு செய்த விஷயங்கள் ஏராளம்..

ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போடவைத்து அடிப்படை படிப்பையே நாசமாகிவிட்டார் என்கிறார்கள் .. இன்றைய புதிய தலைமுறைக்கு அப்போதைய கொடுமை தெரியாது..

பெரிய அறிவு ஜீவுகள் போல் அளவுகோல் வைத்துக்கொண்டு ஒன்றாம் வகுப்பிலேயே பல குழந்தைகளை ஆசிரியர்கள் பெயிலாக்குவர்கள்.. எவனும் கேக்கமுடியாது..

பள்ளியில் உள்ளவர்களுக்கு வேலை செய்யாவிட்டாலோ, கோபத்தில் பெற்றோர் பகைத்துக்கொண்டாலோ கதையே கந்தல்தான்..அந்த குழந்தையோட கதை செத்தாண்டா சேகர் மொமெண்ட்தான்..

இப்படிப்பட்ட கேட்டகிரியில் அதுவும் கிராமங்களில் ஒன்றாம் வகுப்பிலேயே பல வருடம் பெயிலான குழந்தைகள் உண்டு..மூன்றாம் வகுப்பு வருவதற்கே அவர்களுக்கு ஆறேழு வருடங்கள் ஓடுவிடும்..

ஒன்றாம் வகுப்பில் பாஸான குழந்தைகளுக்கும் பெயிலான குழந்தைகளுக்கும் அறிவில் அப்படி என்ன மாபெரும் வித்தியாசம் கண்டார்கள் என்பது அப்போதைய பள்ளிக்கல்வி புள்ளிகளுக்கே வெளிச்சம்..

இப்படி தொடர்ச்சியான பெயிலால் மக்கு பிள்ளை என்று முத்திரை குத்தப்பட்டதும் பெற்றோர் வெறுத்துப்போய் பிள்ளையிடம் படித்து கிழித்ததுபோதும் என்று நிறுத்தி விட்டு வேலைக்கு அனுப்பிவிடுவார்கள்.. என் நண்பன் ஒருவன் இரண்டாம் வகுப்பில் மூன்று முறை ஃபெயில் ஆகி கடைசியில் படிப்பை நிறுத்தி விட்டார்கள். இப்படி எழுபதுகளில் இறுதிவரை பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போனவர்கள் ஏராளம், ஏராளம்..

இதற்கு முடிவு கட்டத்தான் ஆல் பாஸ் முறையை கொண்டுவந்தார் எம்ஜிஆர்..ஒன்றாம் வகுப்பில் பிக் அப் ஆகாத குழந்தைகள் தொடர்ந்து படித்ததால், நாலாம் ஐந்தாம் வகுப்பில் பிக்கப் ஆனார்கள்.

பெரிய சாதனையாளர்களாக நீங்கள் பார்க்கும் அனைவரும் பள்ளி படிப்பில் அவ்வளவு பிரகாசமாக இல்லாமல், பின்னாளில் வேகம் பிடித்தவர்களாகத்தான் இருப்பார்கள்..

ஆரம்ப, நடுநிலை உயர்நிலை பள்ளிகளில் உங்களின் வகுப்பில் நெம்பர் ஒன்னாய் ஜொலித்தவர்களும் மக்கு சாம்பிராணிகளும் பின்னாளில் எப்படியானார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.. உங்களுக்கே புரியும்..

காலகட்டங்களை பற்றி யோசிக்கவே தெரியாமல், ஆளைப்பிடி.. அடிச்சி முடி என்ற கோட்பாட்டில் வாழும் பிறவி அறிவாளிகளுக்கு எம்ஜிஆர் பெரிய லூசாகத்தான் தெரிவார்.

கல்வி தந்தைகளை உருவாக்கி கல்விக் கொள்ளையரை பெருகச்செய்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு எம்ஜிஆர்மீது.. அப்பட்டமான உண்மைதான்..

குடிநீர் ஆதாரங்களாக விளங்கிய ஏரி, குளம்போன்றவற்றை கல்வித்தந்தைகள் ஆட்டையை போட்டதற்கும் எம்ஜிஆர்தான் காரணம் என்பதிலும் மாற்றுக்கருத்தே கிடையாது..

ஆனால் இந்த விவகாரம் எப்படி ஆரம்பித்தது தெரியுமா? தமிழகத்தில் பாலிடெக்னிக். இஞ்சினியரிங் காலேஜ் போன்றவற்றை எழுபதுகளில் தேடித்தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டிய நிலைமை..

கர்நாடகா போன்ற மாநிலங்களில் எஞ்சினியர்கள் நிறைய உருவாவதை பார்த்த முதலமைச்சர் எம்ஜிஆர், தமிழகத்திலும் எஞ்சினியர்கள் நிறைய உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடித்த அவருக்கு ‘படிப்பு மீதிருந்த ஏக்கம் அவரை நன்றாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்..

இருந்தபோதிலும் அரசின் நிதி பற்றாக்குறையால் புதிய எஞ்சினியரிங் கல்லூரிகளை தொடங்கமுடியவில்லை..
அதனால்தான் மாற்று வழியாக தனியார்களுக்கு வாய்ப்பு வழங்கினார்.. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பாலிடெக்னிக், எஞ்சினியரிங் கல்லூரிகள் முளைத்தன..

பணம் கொடுத்தோ, அல்லது அரசு கோட்டாவில் கிடைத்தோ, இவற்றில் படித்தவர்கள்தான் அடுத்தடுத்து உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று கோலேச்சி வருகின்றனர்..

இந்தியாவில் எல்லா வகையான படிப்புகளும் நிறைய கிடைக்கின்ற மாநிலமாக இன்றைக்கும் திகழ்வது தமிழகம்தான்..இதற்கு அடித்தளம் இட்டவர் அன்றைய முதல்வர் எம்ஜிஆர்..

ஆர்ட்ஸ் குரூப் பட்டதாரியையே வியப்பாக பார்தத தமிழகத்தில் இன்றைக்கு எஞ்சினியரிங் பட்டதாரி இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை ஏறக்குறைய உருவாகிவிடவில்லையா..

அப்போதைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாமல் நல்ல நோக்கத்திற்கு கல்விநிறுவனங்களை தனியார் நடத்த அவர் அனுமதித்தார். அனுமதி பெற்றவர்கள் வரம்பு மீறி போய்விட்டார்கள்.. கல்விக்கொள்ளையில் எல்லோருக்கும் பங்கு கிடைத்ததால் பின்னாளில் வந்தவர்கள் யாருமே, தனியார் கல்வி நிறுவனங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவிரும்பவில்லை..
அரசு கல்விநிறுவனங்கள் பல மடங்கு பெருக எவரும் ஆர்வம் காட்டவில்லை..

எம்ஜிஆர் என்னமோ. காலாகாலத்திற்கும் கொள்ளை அடிச்சிட்டு போங்கடான்னு சாசனம் எழுதி குடுத்துட்டு செத்தா மாதிரி, அவரு கல்வி கொள்ளையர்களை உருவாக்கினார்..உருவாக்கினார்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க..

இப்படிச்சொல்வறங்க பாதிப்பேர் அதே தனியார் கல்வி நிறுவனங்களில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் கணிசமாக பணம் குடுத்து படிச்சவங்களா இருப்பாங்க.. மீதிப்பேரு, தங்களை பிள்ளைகளுக்காக கொட்டி கொடுத்தவங்களா இருப்பாங்க..

பத்து வருஷம் இருந்தாரு..போய்ட்டாரு அதற்கப்புறம் முப்பது வருஷமா எவ்வளவோ மாற்றங்களை கொண்டுவந்திருக்கலாம். இதற்கு யார் பொறுப்பு?அவர் ஆட்சிக்காலத்தில்தான் உருவானது..

ஒரே கேள்வி எம்ஜிஆர் காலமானது 1987 டிசம்பர்.. அப்போது கல்வித்தந்தைகளின் சொத்து எவ்வளவு? அதன்பிறகு எத்தனை கல்வித் தந்தைகள் உருவானார்கள்? அவர்களுடைய சொத்து எவ்வளவு? அவர்களின் வளர்ச்சிக்கு யார் காரணம்?

இன்னைக்கு எண்ணற்ற கல்வித்தந்தை களைக்கொண்டிருக்கும் யோக்கியமான கட்சிகள்தான் எம்ஜிஆரை விமர்சித்து கொண்டிருக்கின்றன..

அவரின் நல்ல நோக்கம்.. கிடைத்துவரும் பலன்கள் யாவும் கண்ணுக்கு தெரியவில்லை..ஆனால் அவரை, கேவலம் ஒரு நடிகன் என்று விமர்சிக்க அவரால் விளைந்த தவறுகள் மட்டுமே பெரிதாக தெரிகின்றன இந்த 100 சதவீத அறிவாளிகளுக்கு…

உயர்கல்வியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கும் உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களில்.. உயர் பதவிகளில் தமிழர்கள் அமர்வதற்கான கல்வி மறுமலர்ச்சி விதை யார் போட்டது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

தெரியாவிட்டால் எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த காலகட்டத்தையும் அவருக்கு பிந்தைய கால கட்டத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள் எம்ஜிஆர் ஆட்சி என்ன கிழித்தது என்று தெரியவரும்.. அவ்வளவு ஏன்? உங்கள் குடும்பத்திலேயே முன்னோர்களின் கல்வி வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்..