மதுரை:

104 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கோவில் சிலை  மதுரை மாவட்டம் மேலூரில்  பூசாரியின் வீட்டில் சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்த நிலையில், அந்த சிலையை அதிகாரிகள் மீட்டனர்.

மதுரை அருகே மேலூர் நகைகடை தெரு பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் இருந்த சுமார்   2 அடி உயர அம்மன் சிலை 1915ம் ஆண்டு திடீரென காணாமல் போனதாக  புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை பல ஆண்டுகாலம் தேடி வந்த நிலையில், சிலை கிடைக்காததால் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

தற்போது பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏராளமான சிலைகளை மீட்டு வரும் நிலையில், இந்த காணாமல் போன சிலை குறித்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கோயில் நிர்வாகம் சார்பில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.

புகாரை தொடர்ந்து, சிலை குறித்து விசாரணை நடத்தி வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலை காணாமல் போன சமயத்தில்  கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த நாரயணமூர்த்தி, கந்தசாமி ஆகியோரது குடும்பத்தினரிடம் விசாரணையை தொடர்ந்தனர்.

அப்போது பூசாரி கந்தசாமி வீட்டில் உள்ள சுவர் ஒன்றில் திரவுபதி அம்மன் சிலை மறைத்து வைக்கப்பட்டதை கண்டறிந்த போலீசார், சுவற்றை உடைத்து சிலையை மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த பகுதி மக்கள்  திரவுபதி அம்மன் சிலையை கோவிலுக்கு கொண்டு வந்து விசேஷ அபிசேஷம் செய்து பூஜை நடத்தி வழிபட்டனர்.