கேரளத்தில் 4ம் வகுப்புத் தேர்வெழுதிய 105 வயது பாட்டி!

கொல்லம்: கேரள மாநிலத்தில் 105 வயதானப் பாட்டி ஒருவர், முதியோருக்கான எழுத்தறிவுத் தேர்வில் பங்கேற்று ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளார்.

இத்தேர்வு, அம்மாநில எழுத்தறிவு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டதாகும் மற்றும் நான்காம் வகுப்பிற்கு சமமான தேர்வாகும் இது. இந்த இயக்கம் சார்பில் அம்மாநில முதியோருக்கு எழுதப் படிக்க கற்றுத்தரப்படுகிறது.

இந்நிலையில் கொல்லத்தைச் சேர்ந்த பாகீரதி என்னும் 105 வயது பாட்டிக்கு படிப்பதில் ஆர்வம் பிறந்தது. இவர் தனது சிறுவயதில் 3ம் வகுப்போடு, குடும்பச் சூழலால் படிப்பை நிறுத்தியவர். ஆனாலும், படிப்பின் மீதான தனது ஆர்வத்தை மட்டும் இழக்காதவர்.

தற்போது பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரப் பிள்ளைகள் புடைசூழ வாழ்ந்துவரும் இவர், எழுத்தறிவு இயக்கத்தின் சேவையைப் பயன்படுத்திக்கொண்டு, நான்காம் வகுப்பிற்கு இணையான தேர்வை எழுதினார்.
இவருக்கு எழுதுவது மிகவும் கடினமாக இருந்ததால், இவரது மகளின் உதவியுடன் இவர் தேர்வை எழுதினார்.

இவரின் நினைவுத்திறன் இந்த வயதிலும் சிறப்பாக இருப்பதாக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆச்சர்யத்துடன் குறிப்பிட்டனர். மேலும், இவரது கண் பார்வையிலும் பெரிதாகப் பிரச்சினையில்லை என்றனர்.

சுற்றுச்சூழல், கணக்கு மற்றும் மலையாளம் ஆகிய பாடங்களில் நடத்தப்பட்ட தேர்வை அந்தப் பாட்டி மொத்தம் 3 நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதினாராம். இதற்குமுன் இத்தேர்வை அம்மாநிலத்தில் 96 வயது பாட்டியான கார்த்தியாயினி எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.