பெங்களூரு:

‘காவிரி காலிங் புராஜக்ட்’ (காவிரி கூக்குரல் -Cauvery Calling campaign)  மூலம் ஜக்கி வாசுதேவின் இஷா பவுண்டேஷன் ரூ.10,626 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.  இது தொடர்பான வழக்கில்  கர்நாடக உயர்நீதி மன்றம் ஜக்கி வாசுதேவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி சாட்டையை சுழற்றி உள்ளது.

மேலும், இஷா பவுண்டேஷன் ஆன்மீக அமைப்பு என்பதால் சட்டத்திற்கு கடுப்பட மாட்டோம் என்ற மெத்தனம் வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி நீர் பிரச்சினையால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், இரு மாநில விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றப்படுவதாக கூறி, ஜக்கி வாசுதேவின் ஆன்மிக நிறுவனமான இஷா பவுண்டேஷன் சார்பில்  கடந்த ஆண்டு (2019) ஜுலை 20ஆம் தேதி,  ‘காவேரி கூக்குரல்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதில், ஈஷா  நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர். அரிஜித் பஷயத், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் ஏ.எஸ்.கிரண்குமார், கே.ராதாகிருஷ்ணன், ‘பயோகான்’நிறுவனத்தின் தலைவர் கிரண் மசூம்தார் ஷா, உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்கங்களின் தந்தை என அழைக்கப்படும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் ப்ரவேஷ் ஷர்மா, உலக வன உயிரின நிதியத்தின் (WWF) இந்திய தலைமை செயல் அதிகாரி .ரவி சிங், கர்நாடகாவின் முன்னாள் முதன்மை செயலர் நரசிம்ம ராஜூ மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய  ஜக்கி வாசுதேவ், காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தின் மூலம் 12 ஆண்டுகளில் காவிரி பாயும் பகுதிகளில் 253  கோடி மரங்கள் நடப்படும் என்றும், இதற்காக 2017-ம் ஆண்டு கர்நாடக அரசுடன் ஈஷா அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன் முதல்கட்டமாக, 73 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்முலம் கர்நாடகம் மற்றும் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன்பெறுவர் என்றும் தெரிவித்தார். இதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, மாநில கவர்னர்கள், முதல்வர்கள், திரையுலகினர்  உள்பட பல்வேறு அமைப்பினரையும் சந்தித்து, காவிரி கூக்குரல் திட்டத்தை பிரபலப்படுத்தி வந்தார். மரங்கள் நடுவதற்கு பணம் தேவை என கூறி, வசூல் வேட்டையும் நடத்தினார்.

ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல்  இயக்கத்துக்கு, நாடு முழுவதும் உள்ள 95 க்கும் மேற்பட்ட சுற்று சூழல் அமைப்புகள் தங்களது ஆதரவையும் தெரிவித்திருந்தன. மேலும், ஹாலிவுட் முன்னணி திரைநட்சத்திரம் லியானார்டோ டிகேப்ரியோவும் தனது ஆதரவைப் பதிவு செய்திருந்தார்.

ஆனால்,  என்விரான்மென்ட் சப்போர்ட் குரூப்(ESG) என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஜக்கியின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து,லியானார்டோ டிகேப்ரியோ தனது ஆதரவை வாபஸ் பெற்றார்.

ந்த நிலையில் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர், காவிரி கூக்குரல் திட்டத்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக இஷா பவுண்டேசன் மீது வழக்கறிஞர் ஏ வி அமர்நாதன்  என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், இஷா பவுண்டேசன் காவிரி கூக்குரல் திட்டப்படி கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமைநீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுதர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து நீதிபதிகள் இஷா பவுண்டேசனுக்கு பல்வேறு கேள்விக்கணைகளை வீசினர். அப்போது, இதுபோன்ற புத்துணர்ச்சி நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை யாராவது  உருவாக்கினால், அது மிகவும் வரவேற்கத்தக்கது, ஆனால், அதற்காக பலவந்தமாக நிதி சேகரிப்பது சரியல்ல என்றனர்.

மேலும், பலவந்தமாக நிதி வசூலித்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து மாநில அரசு ஏன் இதுவரை இஷா பவுண்டேசன் விசாரணை நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.

 “ஒரு குடிமகன் உங்களிடம் (மாநிலத்தில்) மாநிலத்தின் பெயரில் நிதி சேகரிக்கப்படுவதாக புகார் கூறும்போது, ​​விசாரிப்பது அரசின் பொறுப்பல்லவா?”  என்று தலைமை நீதிபதி கர்நாடக மாநில பாஜக அரசை கடுமையாக சாடினார்.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்,   இது தொடர்பாக அரசு எந்தவொரு புகாரும் அரசுக்கு வரவில்லை என்றும், அரசு நிலத்தில் எந்தவொரு  வேலையும் செய்ய இஷா அறக்கட்டளையை அரசு அனுமதிக்கவில்லை என்றுவாதிட்டார். 

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், புகார் பெறவில்லை என்பதால், அது பணம் வசூலிக்கப்படுவதற் கான அங்கீகாரம் இல்லை என்றும் இஷா பவுண்டேஷனுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் கொடுத்துள்ள புகாரின்படி, காவிரி பிறந்த இடமான தலக்காவேரி முதல் திருவாரூர் வரை காவேரி ஆற்றங்கரையின் 639 கிலோமீட்டர் பரப்பளவில் 253 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதறக்க இஷா பவுண்டேஷன் மரம் ஒன்றுக்கு ரூ.42 வசூல் செய்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியதுடன், இதன் காரணமாக மொத்தம் ரூ .103,626 கோடி (ரூ.42 x 253கோடி= 10,626 கோடி) வசூல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது… மனுதாரர் கூற்றுப்படி இரு ஒரு மாபெரும் மோசடி என்று கூறினார்.

மேலும்,  “காவிரி கூக்குரல் தொடர்பாக ஆய்வுகள் நடத்தியதாக அறக்கட்டளை கூறுகிறது, ஆனால்., அந்த நிறுவனம் அது தொடர்பாக அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்திருக்க வேண்டும், ஆனால், இவரை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய நீதிபதிகள்,

இஷா பவுண்டேஷனின்  ஆய்வறிக்கையை ஆய்வு செய்த பின்னரே, இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை என்றும் மாநில அரசுக்கு கடும்  கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து,  மாநிலத்தின் அரசு நிலத்தில்  எந்தவொரு தனியார் அமைப்புக்கும், முறையான ஒப்புதல் இல்லாமல், எந்த வேலையும் செய்ய அனுமதிக்க முடியாது. “ என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,

‘காவிரி கூக்குரல் திட்டத்திற்காக’ வசூலித்த தொகையை வெளிப்படுத்தும் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சத்குரு ஜக்கி வாசுதேவின் இஷா அறக்கட்டளைக்கு  அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும்,  “நீங்கள் ஒரு ஆன்மீக அமைப்பு என்பதால் சட்டத்திற்கு கட்டுப்படவில்லை என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம்” என்று எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.

கர்நாடக உயர்நீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு இஷா பவுண்டேஷசனுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற  இலவசமாக மரம் நடுவதாக கூறி வந்த  ஜக்கி வாசுதேவ், அதற்காக 10,626 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள தகவல் தற்போது நீதிமன்றத்தின் மூலம்  அம்பலமாகி  உள்ளது…

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.