108 எண் சேவை பாதிப்பு: மாற்று எண் அறிவிப்பு

தொழில்நுட்ப கோளாறால் 108 எண் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியிலான அவசர உதவிக்கு அரசு சார்பில் 108 எண் ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் இருக்கிறது. விபத்து நேரிட்டாலோ, திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ 108க்கு இலவசமாக அழைக்கலாம். அவர்கள் நேரடியாக ஆம்புலன்சில் வந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வார்கள். செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் முதலுதவி செய்யப்படும். இது ஏழை, எளிய மக்களுக்கு மிகப் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பலரும் 108 எண்ணை தொடர்பு கொள்ள இயலவில்லை என சமூக வலைத்தளங்களில் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 108 எண் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 044-40170100 என்ற எண்ணை தற்காலிகமாக தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம் போல் 108 சேவை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.