109 அடி உயரத்தில் என்.டி.ராமராவுக்கு ஆந்திராவில் சிலை: சந்திரபாபு நாயுடு

அமராவதி:

ந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமா ராவிற்கு 109 அடி சிலையுடன் கூடிய நினைவுச்சின்னம் அமைக்க , ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஆந்திர மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

குஜராத்தில் உலகிலேயே உயரமான பட்டேல் சிலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களிலும், உயரமான சிலைகளை அமைப்பதில் மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

மகராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் சிலை, உத்தரப்பிரதேசத்தில் 221 மீட்டர் உயர ராமர் சிலை, ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கர்நாடகாவில் காவிரி தாய்க்கு சிலை,  ‘குஜராத்தில் புத்தர் சிலை என அடுத்தடுத்து  பிரம்மாண்டமான சிலைகள் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், என்டிஆர் என ஆந்திர மாநில மக்கள் அன்போடு அழைக்கும், முன்னாள் நடிகரும், முதல்வருமான என்.டி.ராமராவுக்கு  சிலை அமைக்க தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில்  உள்ள குண்டூர் மாவட்டம் நீருகொண்டா கிராமத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என்.டி.ஆருக்கு சிலை மற்றும் நினைவுச் சின்னம் கட்டமைக்கப்பட இருப்பதாக அறிவிப்பட்டு உள்ளது. சிலை அமைக்கப்படும் இடத்தின் அருகிலேயே உள்ள 184 ஏக்கர் நிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை எல் & டி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இந்த திட்டத்தில் செயற்கையாக ஏரி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த ஏரியைக் கடந்து அருகில் உள்ள மலை மீது நிறுவப்பட இருக்கும் சிலையை சொகுசுப் படகில் சென்று ரசிக்கலாம்.

இங்கு தியேட்டர், ஓட்டல்கள், அரங்கு, செல்ஃபி பாயிண்ட், வணிக வளாகங்கள், மால்கள் மற்றும் ரிசார்ட்கள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.

இந்த சிலை அமைக்கும் திட்டத்தினை டிரஸ்ட் ஒன்று அமைத்து செயல்படுத்த உள்ளதாகவும், இதற்கான நிதியில் பெரும்பாலான பகுதியினை நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் எனவும் தெரிகிறது.

ஏற்கனவே ராமராவ் ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்தபோது, 58 அடி உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலையை நிறுவயிது குறிப்பிடத்தக்கது.  இதுவே உலகின் அதிக உயரம் கொண்ட ஒற்றைக்கல் புத்தர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.