10ம், 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து; அனைவரும் தேர்ச்சி…. தமிழகஅரசு அதிரடி அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.  ஏற்கனவே நடைபெற்ற தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சிஅடைவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக வரும் 15ந்தேதி நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றமும் தமிழகஅரசின் முடிவை கடுமையாக விமர்சித்து இருந்தது.

இதையடுத்து, இன்றுகாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி, கல்விஅமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 10ம் வகுப்பு தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

அதன்படி,  தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்தது. இதனோடு 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட இருந்தன. ஆனால், தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்துக்கான தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மாணவ, மாணவிகள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்து 80% மதிப்பெண்ணும், பள்ளி வருகையை கணக்கில் எடுத்து 20% மதிப்பெண்ண் வழங்கப்படும் என்றும்  கூறி உள்ளார்.

நிலுவையில் உள்ள 12-ம் வகுப்புத்  தேர்வு குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.