Random image

10ந்தேதி ‘பாரத் பந்த்’: தமிழக கம்யூனிஸ்டு கட்சிகள் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு

டில்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து 10ந்தேதி நாடு முழுவதும்  ‘பாரத் பந்த்’ நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளும் வேலைநிறுத்தத்தில் பங்குகொள்வதாக அறிவித்து உள்ளது. மேலும் இநத வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும், கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படு கிறது. இதை கண்டித்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி கலந்துகொள்வதாக அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்த இன்று காலை  இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைசெயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)லிபரேசன்மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர் ஏ.எஸ். குமார், என்.குமரேஷ், எஸ்.யு.சி.ஐ. (சி) மாநிலக்குழு உறுப்பினர்கள்வி. சிவக்குமார், எஸ். சுருளியாண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்டதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோடி அரசு கடைபிடித்து வரும் நாசகர பொருளாதாரக்கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்குஉயர்ந்து கொண்டுள்ளது.

இதன் விளைவால் நாடுமுழுவதும் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள்,விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதியினரும்தாங்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகிவருகின்றனர். சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின்விலை குறைந்த போதும், அதன் பலனை அடித்தட்டுமற்றும் நடுத்தர மக்களுக்கோ, சிறு-குறு மற்றும்நடுத்தர தொழில்களுக்கோ, அத்தியாவசியப்பொருள்கள் போக்குவரத்துக்கோ போய்ச் சேர்ந்துவிடாமல் பாஜக அரசு கடந்த நான்கு வருடங்களாககலால் விரியை உயர்த்தி கொள்ளையடித்து வருகிறது.

தமிழக அரசும் பெட்ரோல் – டீசல் மீதான வரியைகுறைக்க முடியாது என மறுத்து வருகிறது. இத்தகைய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துநாடு தழுவிய அளவில் செப்டம்பர் 10ந் தேதிபொதுவேலைநிறுத்தம் நடத்துவது என இடதுசாரிகட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

தமிழ்நாட்டில் இப்பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதெனவும், நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்துப் பகுதி மக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும், அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்துவகையான வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.