சென்னை: தனித்தேர்வர்களை மற்ற மாணவர்களைப் போல,  தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் 10ம் வகுப்பு உள்பட பல்வேறு வகுப்பு தேர்வுகள் நடத்தப்படாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,  தேர்வை எதிர்கொள்ள தயாராக இருந்த, தனித்தேர்வர்கள், தங்களை  தேர்ச்சி பெற்றதாக  தமிழக அரசு அறிவிக்கவில்லை, எங்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில்,  பள்ளிகளில் வந்து படிக்கும் மாணாக்கர்களை போல தனித்தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று கூறியிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,   பள்ளி மாணவர்களை போல தனித்தேர்வர்களையும் ஆல்பாஸ் ஆக அறிவிக்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதா என பள்ளிக்கல்வித்துறை யிடம் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதில் அளித்த அரசு, பள்ளிகள் திறப்பது குறித்து இப்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நெருங்குவதாகவும் அக்டோபர் மாதம் ரிசல்ட் வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது.