சேலம்: தமிழகம் முழுவதும் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 32ஆயிரத்து, 221 ஆக உள்ளது. நேற்று மட்டும் புதியதாக 18  பேருக்கு தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 52 பேர் நேற்று குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,571 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், இதுவரை 465 பேர் பலியான நிலையில், தற்போது, 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், 10ம்வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களின் படிப்பை கருதி, 19ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி, சேலம் மாவட்டத்திலும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில்  கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மாணவர் அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்ற நிலையில், அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனை அழைத்துச்சென்று சோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, அந்த மாணவருடன் தொடர்பில் இருந்து மாணவர்கள் மற்றும்  விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறந்த 2 நாளில் மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது, ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.