மும்பையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலி: 204 பேருக்கு பாதிப்பு

மும்பை: மும்பையில் மட்டும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.குறிப்பாக மும்பையில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மும்பையில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாள்தோறும் சராசரியாக 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்து உள்ளனர்.

இந் நிலையில் இன்று மும்பையில் மட்டும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் மட்டும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1753 ஆக உயர்ந்து உள்ளது. மொத்தமாக, 111 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது.