வதோதரா: குஜராத் மாநிலத்தில், லாரிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர்.

இந்த விபத்து நகருக்கு அருகிலுள்ள வாகோடியாவில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் நடந்துள்ளது. சூரத்தின் வராச்சாவைச் சேர்ந்த சில குடும்பத்தினர், பஞ்சமஹால் மாவட்டத்தில் பாவகத், வட்டல் மற்றும் டகோர் கோயில்களை பார்க்க மினி லாரி வாடகைக்கு எடுத்துள்ளனனர்.

28 பேரை ஏற்றிச் சென்ற அந்த மினி லாரி பின்னால் இருந்து வந்த லாரியுடன் மோதியது.  விபத்தில் 11 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் விஜய் ரூபானி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியும், விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: வதோதரா விபத்து குறித்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பங்களுடன் துணை நிற்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.