11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு! அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல் – புகைப்படங்கள்…

சென்னை: அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன்  11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு  கூட்டம் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளுடன் காலை முதல் அப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் வருகையின்போது மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதையடுத்து,  அதிமுக நிர்வாகிகளின் சிறப்புரைகளுக்குப் பிறகு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், பொதுக்குழுவில் அதிமுகவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு குழுவுக்கு ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கி 16வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.