ரியாத்

லகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அல்வாலீத் பின் தலால் உட்பட 11 இளவரசர்கள் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் சவுதி அரேபியாவின் இளவரசர்களில் ஒருவரான அல்வாலீத் பின் தலால்.  இவர் பல பன்னாட்டு தொழில்களை நடத்தி வருகிறார்.   பல சமூக வலை தளங்களிலும், அரேபிய நாடுகளின் புகழ்பெற்ற தொலை தொடர்பு நிறுவனங்களிலும் இவர் பங்குதாரர்களில் ஒருவர் ஆவார்.   ஏற்கனவே 2015ஆம் வருடம் டொனால்ட் ட்ரம்பை விமர்சித்து அல்வாலீத் பதிவிட்டதும் அதற்கு ட்ரம்ப் பதிலடி அளித்ததும் அப்போது பரபரப்பை உண்டாக்கியது.

சவுதி அரேபியாவின் அல் அரேபியா என்னும் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனம் அல்வாலீத், மற்றும் 10 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள், பத்து முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.   சவுதி அரசர் சல்மானின் மகன்களில் ஒருவரும், அரசருக்கு ஆலோசகருமான முகமது பின் சல்மானின் யோசனைப்படியே இந்த கைதுகள் நடைபெற்றதாக தெரிய வருகிறது.  கடந்த ஜூன் மாதம் அரசரின் ஆலோசகராக அறிவிக்கப்பட்ட முகமது பின் சல்மான் மற்ற இளவரசர்கள் மீது ஊழல் புகார்களை தொடர்ந்து எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அல் அரேபியா அளித்த தகவலின்படி ஊழல் எதிர்ப்பு மையம் ஒன்று அரசால் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மையத்துக்கு லஞ்சம் மற்றும் ஊழலில் சம்பந்தப்பட்ட யாரையும் கைது செய்யவும்,  வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கவும்,  அவர்களின் சொத்துக்களை முடக்கவும்,முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளது.

இந்த செய்தி வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக சவுதி அரேபியாவின்  தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலீத் சர்வதேச விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது.   இதில் உயிர்ச்சேதமோ காயம் அடைதலோ நிகழவில்லை என செய்திகள் வந்தன.  இதையொட்டி அந்த விமான நிலையம் மூடப்பட்டது.    இந்த விமான நிலையம் இளவரசர் அல்வாலீத் நாட்டை விட்டு செல்லாமல் தடுக்கவே மூடப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.