8ந்தேதி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்! பரபரப்பு தகவல்கள்…

தெஹ்ரான்:

ராக்கில்  முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80பேர் பலியானதாக ஈரான் தெரிவித்திருந்த நிலையில்,  அந்த தாக்குதலில்  11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி கொல்லப்பட்டார். இதையடுத்து கொதித்தெழுந்த ஈரான் அமெரிக்காவுக்கு  பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தது. அதையடுத்து, கடந்த 8ந்தேதி  அமெரிக்க படைகள் ஈராக்கில் முகாமிட்டுள்ள  பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

அல்-ஆசாத் விமானப்படை தளத்தை 17 ஏவுகணைகளும், எர்பில் தளத்தை 5 ஏவுகணைகளும் தாக்கியதாக கூறிய ஈரான், இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தெரிவித்தது. ஆனால், இந்த திடீர் தாக்குதலினால், ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது,  தங்கள் படை தளங்கள்மீது  தாக்கப்பட்டதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.  அல் ஆசாத் விமானப் படை தளத்தின் மீது 8-ம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில், 11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாகவும்,  குண்டுகள் வெடித்தபிறகு ஏற்பட்ட மூளையதிர்ச்சியால் பல வீரர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.