பிரம்மபுத்ரா வெள்ளம் : சிறுவனின் வீரச் செயல்
கௌஹாத்தி
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது தாயையும் அத்தையும் ஒரு 11 வயது சிறுவன் நீரில் குதித்து காப்பாற்றி உள்ளார்.
அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினால் மாநிலம் முழுவதும் மக்கள் க்டும் துயருக்கு உள்ளாகினர். கௌஹாத்தி நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணியினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
வடக்கு கௌஹாத்தி நகரில் உள்ள செயிண்ட் அந்தோணி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் கமல் கிஷோர் தாஸ். சுமார் 11 வயதான இவர் தனது தாயுடன் நேற்று மீட்புப் படகில் சென்றுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வெள்ளத்தினால் படகு தடுமாறி ஒரு சிமெண்ட் தூணில் மோதி கவிழ்ந்தது. அனைவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
கமல் கிஷோரின் தாயார் அவரை உடனடியாக காலணிகளை அகற்றி விட்டு நீந்தி அருகில் உள்ள மேடான பகுதிக்கு செல்ல சொல்லி உள்ளார். கமல் அது போலவே செய்துள்ளார். அதன் பிறகு தனது தாய் தன்னுடன் வராமல் வெள்ளத்தில் சிக்கி உள்ளதை கண்டு நீரில் குதித்து அவரை இழுத்து வந்து கரை சேர்த்துள்ளார்.
அப்போது அவருடைய அத்தை வெள்ளத்தில் அடித்துச் செல்வதைக் கண்ட கமல் மீண்டும் நீரில் குதித்தார். அருகில் சென்றதும் அத்தையின் தலை முடியை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். மிகவும் சிரமத்துடன் இவ்விருவரையும் காத்த கமல் அப்போது ஒரு தாய் தனது கைக்குழந்தையுடன் அடித்துச் செல்வதைக் கண்டு மனம் பதறினார்.
மூன்றாம் முறையாக நீரில் குடித்து அவர்களையும் காக்க முயன்றார். ஆனால் இருவரையும் கரைக்கு கொண்டு வரும் வேளையில் குழந்தை மீண்டும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது. குழந்தையைப் பிடிக்க சென்ற தாயும் ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டுள்ளார்.
இதை தெரிவித்த கமல் தன் தாயும் அத்தையும் காப்பாற்ற பட்டாலும் மற்றொரு தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடியாமல் போனதற்காக வருந்தி உள்ளார். இந்த சிறுவனின் தீரச் செயலை மக்கள் பெரிதும் பாராட்டி உள்ளனர்.