சூரத் : பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமி சடலம் கண்டுபிடிப்பு

சூரத்

சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியின் சடலம் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் மாநில சிறுமியின் விவகாரம் தற்போது நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.    இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் நடந்துள்ளது.

குஜரத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருவரின் சடலம் இந்த மாதம் ஏப்ரல் 6 அம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது.   குப்பை மேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் சிறுமியின் உடலில் 80 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.    மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிறுமி சுமார் 8 தினங்களுக்கு தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டது  தெரிய வந்துள்ளது.

அந்தப் பெண் யார் என்பது இன்னும் அறியப்படவில்லை.    அந்த சிறுமியின் குடும்பத்தினர் யார் என்பது இன்னும் தெரியவில்லை.    காணாமல் போன சிறுமிகளில் பட்டியலைக் கொண்டு காவல்துறை விசாரணை செய்து வருகிறது.    விசாரணையை திசை திருப்ப அந்தப் பெண்ணை வேறு எங்கோ பலாத்காரம் செய்து கொன்று விட்டு சூரத் நகரில் சடலத்தை எறிந்திருக்கலாம் எனவும் காவல்துறை கருதுகிறது.

அந்தச் சிறுமியின் புகைப்படம் மாநிலத்தின் அனைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.     காவல்துறை இது குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.   சிறுமியைப் பற்றியோ அவர் குடும்பத்தினர் பற்றியோ  தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 20000 பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.