சென்னை:

பிரதமர் மோடி உ.பி. மாநிலம் வாரணாசியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை எதிர்த்து, தமிழகத்தை விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்பட  111 விவசாயிகள் வேட்புமனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக முதல்வேட்பாளர் பட்டியல் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில்  உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியும் குஜராத் மாநிலம் காந்திநகரில் அமித்ஷாவும் போட்டியிடுகின்றனர். அத்துடன் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.

விவசாயக்கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி அரசுக்கு எதிராக 100 நாட்கள் டில்லியில் போராட்டம் நடத்திய தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யாகண்ணு தலைமையில் 111 விவசாயிகள்  மோடியை எதிர்த்து போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்து உள்ளார்.

உ.பி.யில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஏப்ரல் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கு கிறது. விவசாயிகள் ஏப்ரல் 25ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும்  அய்யாக் கண்ணு தெரிவித்துள்ளார்.