2017 ஆம் வருடத்தில் 822 இனக்கலவரங்களில் 111 பேர் பலி

டில்லி

டந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற 822 இனக்கலவரங்களில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இனக்கலவரங்களில் கொல்லப்படுவது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.  அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் இன்று மேலவையில் பதில் அளித்துள்ளார்.

அவர் தனது பதிலில், ”கடந்த 2015ஆம் வருடம் நாட்டில் 751 இனக்கலவரங்கள் நிகழ்ந்துள்ளன.  அதில் 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  அதற்கடுத்த வருடமான 2016ஆம் வருடம் 703 இனக்கலவரங்கள் நடந்துள்ளன.   அதில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.   கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற 822 இனக்கலவரங்களில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரங்களை கட்டுப் படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கும் யூனியன் அரசுகளுக்கும் உள்ளன.   இந்த இனக்கலவரங்களைக் குறைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகிறது.  மேலும் பல முறை இவ்வாறு கலவரம் நிகழலாம் என்னும் தகவலை முன் கூட்டியே அறிவித்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.