கொழும்பு:

லங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பதாக கூறி  தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை ராணுவத்தினர் கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தமிழக மீனவர்கள் சார்பாக இந்திய அரசுக்கு பல்வேறு முறை கோரிக்கை விடப்பட்டும், இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியா வர இருக்கிறார். இதன் காரணமாக நல்லெண்ண அடிப்படையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,  இலங்கையின்  பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள   113 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.