பொறியியல் படிப்பில் சேர்ந்தோரின் எண்ணிக்கை கடந்தாண்டைவிட 1,147 பேர் அதிகம்!

சென்னை: நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில், கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 1,147 இடங்கள் கூடுதலாக நிரப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தாண்டு ஒதுக்கப்பட்டிருந்த மொத்த பொறியியல் இடங்கள் 1,72,940. இவற்றில் நிரம்பிய இடங்களின் எண்ணிக்கை 83,396(48.2%). மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 479. காலியாக விடப்பட்ட இடங்கள் 89,544(51.8%).

துணைநிலை கலந்தாய்வின் மூலம் 5,349 இடங்கள் நிரம்பின. அதில் 801 இடங்கள் கலந்தாய்வில் முன்னரே கலந்துகொள்ளாத மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்பட்டன. கடந்தாண்டு காலியாக இருந்த 1,77,117 இடங்களில் நிரம்பியவை வெறும் 82,249 இடங்களே. காலியாக விடப்பட்டவை 94,868 இடங்கள்.

நான்காவது சுற்று கலந்தாய்வில், அட்டவணைப் பிரிவு மாணாக்கர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்ததே எண்ணிக்கை கூடியதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நான்காவது சுற்றில் மட்டும் 30,907 மாணாக்கர்கள் தங்களுக்கான இடங்களைப் பெற்றனர் என்பது ஆச்சர்யத்திற்குரியது.

இந்தாண்டு வெறும் 165 கல்லூரிகளில் மட்டுமே 50%க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன. கடந்தாண்டு இந்த நிலையை அடைந்தவை 170 கல்லூரிகள். இதன்மூலம், மாணாக்கர்கள் பெயர்பெற்ற மற்றும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கல்லூரிகளை மட்டுமே நாடுகிறார்கள் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே நிரூபிக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு கலந்தாய்வில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுதான் பெரும்பான்மை மாணாக்கர்களின் தேர்வாக இருந்தது. அதுவே இந்தாண்டும் தொடர்ந்தது. மிகவும் குறைந்த மாணாக்கர்களால் விரும்பப்பட்ட துறை சிவில் இன்ஜினியரிங்.

சுமார் 2,565 மாணாக்கர்கள் தங்களின் விருப்பத் தேர்வை சரியாக மேற்கொள்ள முடியாத காரணத்தால், அடுத்தடுத்த சுற்றுகளில் கலந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.