கோவை:கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 118 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தரப்படுகிறது. கோவையில் முதலில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 21 பேர் பெண்கள், 3 ஆண்கள், 2 ஆண் குழந்தைகள் அடங்குவர். 26 பேரும் டெல்லி சென்று வந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.

அவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வசித்த பகுதியான மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் யாரும் வெளியில் செல்லாதவாறும், மற்றவர்கள் உள்ளே நுழையாதவாறும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார்? என்பதும் குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரியில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட அவர்கள் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 86 பேர், திருப்பூரை சேர்ந்த 25 பேர், நீலகிரியை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 118 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.