பெங்களூரு,

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 7ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தோனி உள்பட முக்கிய வீரர்களே பழைய நிர்வாகமே தக்க வைத்துள்ள நிலையில் மற்ற வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த சுழல் பந்துவீச்சாளரான அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்குமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஐபிஎல்-ன் 10 சீசன் முடிவடைந்து  இந்த ஆண்டு தனது 11வது சீசனை தொடங்குகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் போட்டிகளை  ஏப்ரல் 7-ந்தேதி  தொடங்கி,  மே 27-ந்தேதி வரை சுமார் 62 நாட்கள் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் வீரர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்று நடைபெற உள்ள ஏலப்போட்டியில் கலந்துகொள்வதாக உலக நாடுகளை சேர்ந்த 578 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயர்களை  பதிவு செய்துள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் 360 பேர்.

இந்நிலையில், இன்று  காலை 10.30 மணி அளவில் பெங்களூரில் ஏலம் தொடங்குகிறது. இன்றும், நாளயும் நடைபெறும் இந்த போட்டியில் எந்த வீரர்கள் என்ன விலைக்கு விற்பனையாகிறார்கள் என்பது தெரிய வரும்.

ஏற்கனவே,  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான தோனிக்கு ரூ.15 கோடி கொடுத்து தக்க வைத்திருப்பதாகவும், சுரேஷ் ரெய்னாவுக்கு 11 கோடியும், ஜடேஜாவுக்கு 7 கோடியும் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழக வீரரான அஸ்வினையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளாத நிலையில் இந்த ஆண்டு ஏலத்தில் கலந்து கொள்கிறார்.

இதேபோல் மும்பை அணி ரோஹித் ஷர்மா, பும்ரா, பாண்ட்யா ஆகியோரையும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி விராட் கோலி, சர்பராஸ் கான், டி வில்லியர்ஸ் ஆகியோரையும் மற்ற அணிகளும் சில வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளன.

மற்ற வீரர்கள் இன்றும், நாளையும் நடைபெற உள்ள ஏல முறையில் தேர்வு செய்யப்படுவர் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில்  இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி, ரவு 7 மணிக்கே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபோல, மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டி இரவு 5.30 மணி அளவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் களம் இறங்குவதால் ஐபிஎல் போட்டியை காண  தமிழக ரசிகர்கள் விசில் அடித்து எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.