அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் 12.8 லட்சம் மாணாக்கர்கள் புதியதாக சேர்ப்பு! பள்ளிக் கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில்  நடப்பாண்டில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், அரசு மற்றும அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 12.8 லட்சம் மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை  தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்றால் கடந்த ஐந்தரை மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி  முதல் தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதன்படி,  1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை தொடங்கியது.  பின்னர், .24-ந்தேதி முதல் பிளஸ் 1  மாணாக்கர்கள் சோ்க்கை அறிவிப்பும் வெளியானது.

இந்த நிலையில்,  நடப்பு ஆண்டில்,  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை  12.88 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.

குறிப்பாக அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் புதிதாக 2 லட்சத்து 75, 455 குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த மாத இறுதி வரை காலஅவகாசம் இருப்பதால் நிகழாண்டு அரசுப்பள்ளிகளில் மேலும் 4 லட்சம் மாணவா்கள் வரை கூடுதலாக சோ்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.