‘டிப்திரியா நோய்:’ டில்லியில் 15 நாளில் 12 குழந்தைகள் உயிரிழப்பு

டில்லி:

தொண்டை அலர்ஜி நோய் (டிப்திரியா) காரணமாக தலைநகர் டில்லியில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 12 குழந்தைகள் பலியாகி இருப்பது பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் பரவி வரும் டிப்திரியா நோய்க்கு குழந்தைகள்  கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக டில்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளில் 12 பேர் பலியாகி இருப்பதாக டில்லி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தொற்று நோய் மருத்துவமனை மருத்துவர்,  பருவநிலை மாற்றம் காரணமாக தொண்டையில் அலர்ஜி ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இம்முறை அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை மட்டும் தொண்டையில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக, டில்லி மாநகராட்சி மருத்துவமனையில் 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 79 பேர் டெல்லி நகருக்கு வெளியே வசிப்பவர்கள். பெரும்பாலும் ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த தொண்டை அழற்சி நோயால், இதுவரை மேற்கு உத்தரபிரேதசத்தைச் சேர்ந்த 11 குழந்தைகளும், டில்லியைச் சேர்ந்த ஒரு குழந்தையும் இறந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி